தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உண்மையான கல்வி எது? - சுவாமி விவேகானந்தர்

Advertisement

மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும். எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியருடைய வேலையாகும்.

நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டு பிடித்தார் என்று சொல்கிறோம். அந்த புவியீர்ப்புச் சக்தி எங்காவது ஒரு மூலையில் நியூட்டன் வருவார் என்று உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது. சரியான நேரம் வரவே அதை அவர் கண்டு பிடித்தார். காலமெல்லாம் உலகம் இதுவரையிலும் பெற்று வந்திருக்கும் அறிவு முழுவதும், மனதிலிருந்துதான் வந்திருக்கிறது. பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல் நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது. வெளி உலகம் வெறும் ஒரு தூண்டுதலாக மட்டும் அமைகிறது. அது உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை. மனஉறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும், கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு (ஆக்கபூர்வமாகப்) பயன் தரும் வகையில் அமைவதற்கு உரிய பயிற்சிதான் கல்வியாகும். கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.

வாழ்க்கையை உருவாக்கக்கூடிய, மனிதனை மனிதனாக்கக்கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக்கூடிய கருத்துகளை கிரகித்து அவற்றை நாம் நம்முடையவையாக்கிக் கொள்ள வேண்டும். நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துகளை கிரகித்துக்கொண்டு, அவற்றை உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனைவிட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.

Advertisement