வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; கில் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு: துணை கேப்டன் ஜடேஜா, கருண் நாயருக்கு கல்தா
மும்பை: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, அக்டோபரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் அக்டோபர் 2ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. 2வது போட்டி, புதுடெல்லியில் அக்டோபர் 10ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த டெஸ்ட் தொடருக்காக கேப்டன் ரோஸ்டன் சேஸ் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த அணியில் முன்னாள் வீரர் சந்தர்பாலின் மகனான தேஜ்நரின் சந்தர்பால் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக துணை கேப்டன் ரிஷப் பண்ட் இந்த தொடரில் விளையாடவில்லை.
இதனால் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் கருண் நாயர் சரியாக ரன் எடுக்காததால் அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் விவரம்: சுப்மன் கில் (கேப்டன்), யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.