மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் சோலார் தண்ணீர் தொட்டி
*விலங்குகள் வெளியேறுவது குறைந்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் சோலார் மூலம் இயங்கும் தண்ணீர் தொட்டியில் வனவிலங்குகள் தாகம் தீர்த்து வருகின்றன.ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ச்சியான மழை இல்லாத காரணத்தினால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நீர் ஓடைகள், சிறிய அருவிகள் அனைத்தும் மறைந்து போய் உள்ளன.
இந்த நிலையில் வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக இந்த வறட்சியான நேரத்திலும் தண்ணீர் கிடைக்கும் வகையில் வனத்துறையினர் அமைத்துக் கொடுத்த சோலார் மூலம் இயங்கும் தண்ணீர் தொட்டிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெரிய அளவிலான யானைகள் முதல் சிறிய அளவிலான செந்நாய்கள் வரை இந்த தண்ணீர் தொட்டியை முற்றுகையிட்டு தாகம் தீர்த்து வருகின்றன.
இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறும்போது, வனப்பகுதியில் வறட்சியான இந்த நேரத்தில் வனவிலங்குகளுக்கு சோலார் மூலம் இயங்கும் தண்ணீர் தொட்டிகள் மிகவும் உதவிகரமாக உள்ளன. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வெளியேறுவது குறைந்துள்ளது.
எனவே விலங்குகள் பயன்பெறும் வகையில் வனப்பகுதியில் கூடுதலாக சோலார்கள் மூலம் இயங்கும் தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.