மேற்கு திசை காற்று மாறுபாடு வரும் 31ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நேற்றைய நிலவரப்படி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரும் 31ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதற்கிடையே, வங்கக் கடலில் மேற்குவங்கத்தை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை உருவாகியுள்ளது.
இது இரண்டு நாட்களில் மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட நோக்கி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் 30ம் தேதி வரை சூறாவளிக்காற்று வீசும் என்றும், 27ம் தேதி வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும் என்றும், தெற்கு, வடக்கு, மத்திய வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.