மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாக நாளை வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாக நாளை வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. கிண்டி, வடபழனி, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், அண்ணாநகர், கோயம்பேடு, திருவொற்றியூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
இதுபோல், சென்னை புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. போரூர், பூந்தமல்லி, மதுரவாயல், தாம்பரம், ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. அண்ணா நகர், வில்லிவாக்கம், மணலி, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. மீனம்பாக்கம், வண்டலூர், தாம்பரம், சேலையூர் பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
வட சென்னை பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியிலும் கனமழை பெய்தது. வியாசர்பாடி பகுதியில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.
இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளைவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோவை, தேனி, தஞ்சை மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.