மேற்கு வங்கத்தில் பரபரப்பு எஸ்ஐஆரால் பணி அழுத்தம் பூத் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்: தடுப்புகளை மீறி போலீசுடன் மோதல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டுள்ள பூத் நிலை அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியால் அதிக பணிச்சுமை ஏற்பட்டு மன அழுத்தம் காரணமாக பூத் நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், பெரும்பாலான பிஎல்ஓக்கள் எஸ்ஐஆர் பணி மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிஎல்ஓ அதிகார ரக் ஷா கமிட்டி வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பு சார்பில் நேற்று எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎல்ஓக்கள் ஆர்ப்பாட்டம் கொல்கத்தாவில் நடந்தது.
இதில், எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அவர்கள், 2 ஆண்டுக்கு மேலாகும் பணியை ஒரே மாதத்தில் முடிக்க அழுத்தம் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் வடக்கு கொல்கத்தாவில் கல்லூரி சதுக்கத்தில் உள்ள மாநில தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மாநில தேர்தல் அதிகாரியிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. சிலர் தடுப்புகளை மீறி நுழைய முயன்றதால் இருதரப்பில் மோதல் ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.