மேற்குவங்கத்தில் ஆள் கடத்தல் பெண்களை விபசாரத்தில் தள்ளும் கும்பல் சிக்கியது: ரூ.1 கோடி பணம், உயர்ரக கார்கள் பறிமுதல் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
கொல்கத்தா: மேற்கு வங்கம் முழுவதும் பார்-கம்-ரெஸ்டாரன்ட்கள் மற்றும் நடன பார்கள் மூலம் ஆள்கடத்தல் நடப்பதாகவும், அதன் மூலம் பெண்களை விபசாரத்தில் தள்ளுவதாகவும் அமலாக்கத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து கொல்கத்தா உள்பட மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் பெண்களை கடத்தி விபசாரத்தில் தள்ளுவது உறுதி செய்யப்பட்டது. அந்த இடங்களில் இருந்து ரூ.1.01 கோடி ெராக்கப் பணம், டிஜிட்டல் சாதனங்கள் , குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய சொத்து தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
சட்டவிரோத நிதியை அனுப்ப சந்தேக நபர்களால் இயக்கப்பட்ட பல வங்கிக் கணக்குகளையும் அமலாக்கத்துறை அடையாளம் கண்டுள்ளது. கூடுதலாக, இரண்டு உயர் ரக சொகுசு வாகனங்கள், ஒரு லேண்ட் ரோவர் டிஃபென்டர் மற்றும் ஒரு ஜாகுவார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆள்கடத்தல் தொடர்பாக மேற்குவங்கத்தை சேர்ந்த ஜக்ஜித் சிங், அஜ்மல் சித்திக், பிஷ்ணு முந்த்ரா மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகள் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அமலாக்கத்துறையும் பணமோசடி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கொல்கத்தா, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சிலிகுரி உள்பட எட்டு இடங்களில் அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது.