மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவேன் என சர்ச்சை பேச்சு திரிணாமுல் காங். எம்எல்ஏ சஸ்பெண்ட்: முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி
முர்ஷிதாபாத்: மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹூமாயுன் கபீர் தெப்ரா தொகுதி பேரவை உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்ததை போன்று மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என அண்மையில் அறிவித்திருந்தார். மேலும், டிசம்பர் 6ம் தேதி(நாளை) பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டப்படும் என்றும், 3 மாதங்களுக்குள் மசூதி கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். ஹூமாயுன் கபீரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஹூமாயுன் கபீரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து முதல்வரும், கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முர்ஷிதாபாத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் வகுப்புவாத அரசியலை செய்யாது. முர்ஷிதாபாத் மாவட்டம் நவாப்களின் மாவட்டம். இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் சிராஜ்-உத்-தவுலா போற்றப்படுகிறார். இந்த மாவட்டத்தில் அனைத்து மதத்தினரின் புனித தலங்களும் உள்ளன. இங்குள்ள மக்கள் மதவாத, கலவர அரசியலை ஏற்க மாட்டார்கள்” என தெரிவித்தார்.