மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரம் இந்தியர்கள் 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைவரிசை
பமாக்கோ: அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுக்களின் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், கடந்த 2020ம் ஆண்டு ராணுவப் புரட்சிக்குப் பிறகு தொடர்ந்து நிலையற்ற தன்மையில் சிக்கித் தவிக்கிறது. இங்கு, அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் (டேஷ்) உடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்களும், தீவிர குற்றக் கும்பல்களும் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இதனால் நாட்டின் பாதுகாப்புச் சூழல் மிக மோசமடைந்து, பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டினரைக் கடத்திச் சென்று பிணைத்தொகை கோருவது இங்கு தொடர் நிகழ்வாகிவிட்டது. கடந்த ஜூலை மாதம், கெய்ஸ் பிராந்தியத்தில் உள்ள ஒரு சிமெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மூன்று இந்தியப் பொறியாளர்களை அல்-கொய்தாவுடன் தொடர்புடைய குழு ஒன்று கடத்திச் சென்றது. அதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் தலைநகர் பமாக்கோ அருகே ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஈரான் குடிமகன் ஒருவர் கடத்தப்பட்டு, கடந்த வாரம் பெரும் பிணைத்தொகைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாலியில் கிராமப்புற மின்மயமாக்கல் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து இந்தியர்களை, துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. மேற்கு மாலியில் உள்ள கோப்ரி என்ற இடத்தின் அருகே நேற்று முன்தினம் (நவ. 6) இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாக அந்நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் நேற்று (நவ. 7) உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த சம்பவத்தையடுத்து, அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மற்ற இந்திய ஊழியர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக தலைநகர் பமாக்கோவிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்தக் கடத்தல் சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தச் சம்பவம், மாலியில் நிலவும் மோசமான பாதுகாப்புச் சூழலை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.