மேற்கு ஆப்ரிக்கா மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி வலியுறுத்தல்
சென்னை: மேற்கு ஆப்ரிக்கா மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளதாவது: மேற்கு ஆப்ரிக்கா-மாலி நாட்டில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மற்றும் தென்காசியைச் சேர்ந்த பொன்னுதுரை, புதியவன், பேச்சிமுத்து, இசக்கிராஜா மற்றும் தளபதி சுரேஷ் ஆகிய ஐந்து தொழிலாளர்கள், அந்த நாட்டிலுள்ள ஆயுதக் குழுவால் கடத்தப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடத்தப்பட்டிருக்கும் அத்தொழிலாளர்களை மீட்டு, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கனிமொழி எம்பி கூறியுள்ளார்.