மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கனமழை 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலும் மழை பெய்யும். டெல்டாவிலும், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. காற்று சுழற்சியின் விட்டம் பெரிய அளவில் இருக்கும் என்பதால் காற்றின் வழித்தடம் வட மேற்கில் இருந்து தென் கிழக்காக வரும் என்பதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 22ம் தேதி வரை மழை பெய்யும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், சென்னை விமான நிலையம், திருநெல்வேலி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. தஞ்சாவூர், கடலூர், கன்னியாகுமரி, சென்னை நுங்கம்பாக்கம், திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பநிலை அதிகரித்தது.
அதிகபட்சமாக மதுரையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. நாகப்பட்டினம், தூத்துக்குடி 102 டிகிரி, சென்னை, கடலூர், தஞ்சாவூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 100 டிகிரி, திருத்தணி, திருச்சி, பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை, கரூர், ஈரோடு மாவட்டங்களில் 99 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
மேலும், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 17ம் தேதியில் நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் அதனால் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை 21ம் தேதி வரை நீடிக்கும். வெப்பநிலையை பொறுத்தவரையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை இருக்கும்.