மேற்குவங்க மாநிலத்தில் 14 லட்சம் வாக்காளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்
கொல்கத்தா: தலைமை தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்களைப் புதிய வாக்காளர்களாகச் சேர்ப்பது, ஏற்கனவே உள்ள பிழைகளைத் திருத்துவது மற்றும் தகுதியற்ற பெயர்களை நீக்குவது போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்த்து, அவர்களிடமிருந்து உரியப் படிவங்களைப் விநியோகித்தும், அதனைப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சரிபார்ப்பு நடவடிக்கையின் போது, சுமார் 14 லட்சம் வாக்காளர்களின் படிவங்கள் ‘ஏற்றுக் கொள்ள முடியாதவை’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்கள் கள ஆய்விற்குச் சென்றபோது, சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் அந்த முகவரியிலிருந்து நிரந்தரமாக இடம் மாறியது, மரணமடைந்தது, ஒரே பெயர் பல இடங்களில் இடம்பெற்றது அல்லது நீண்ட நாட்களாகக் குறிப்பிட்ட முகவரியிலிருந்து வெளியூர் சென்றது போன்ற காரணங்களால் இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்து திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாக, தகுதியற்றவர்களின் பெயர்களை நீக்கித் தரவுகளைச் சுத்திகரிக்கும் பணியே இதுவாகும்.