மே.வங்கத்தில் எஸ்ஐஆரை கண்டித்து பேரணி; பாஜ ஆணையமானது தேர்தல் ஆணையம்: மம்தா பானர்ஜி கடும் தாக்கு
போங்கான்: மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எஸ்ஐஆரை எதிர்த்து இந்தியா-வங்கதேசம் எல்லைக்கு அருகில் உள்ள போங்கானின் சந்த்பராவில் இருந்து வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தாக்கூர்நகர் வரை 3 கி.மீ பேரணி மேற்கொண்டார். இதில் ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
பேரணிக்கு முன்பாக போங்கனில் மம்தா பானர்ஜி பேசியதாவது:
எஸ்ஐஆர் காரணமாக பணி அழுத்தம் ஏற்பட்டு இதுவரை 36 பிஎல்ஓக்கள் இறந்துள்ளனர். அதில் பலர் தற்கொலை செய்து கொண்டவர்கள். மிகவும் குழப்பமான எஸ்ஐஆர் செயல்முறை மூலம் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் மற்றும் பாஜவால் உருவாக்கப்பட்ட பேரழிவு சூழ்நிலையை காட்டும்.
தேர்தல் ஆணையம் பாரபட்சமில்லாத அமைப்பாக செயல்பட வேண்டும். ஆனால் இப்போதுள்ள தேர்தல் ஆணையம் பாஜ ஆணையமாக மாறிவிட்டது. டெல்லியின் அறிவுறுத்தலின்படி அது செயல்படுகிறது. பொதுவாக எஸ்ஐஆர் என்பது இரண்டு, மூன்று ஆண்டுகள் நடத்தப்பட்டால் அதை ஆதரிக்கிறேன். ஆனால் 2026ல் தேர்தல் இருக்கும் நிலையில் 2 மாதத்திற்குள் முடிக்க கட்டாயப்படுத்தி அவசரமாக செய்யப்படுவது ஏன்? எஸ்ஐஆரால் பீகார் தேர்தலில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்.
எனக்கு எதிராக பாஜ அரசியல் ரீதியாக நேருக்கு நேர் போட்டி போட முடியாது. மேற்கு வங்கத்தில் என்னை குறிவைத்தால், நாடு முழுவதும் உங்கள் அடித்தளத்தை அசைப்பேன். காயமடைந்த புலி சாதாரண புலியை விட ஆபத்தானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் வெளிநாட்டவராக அடையாளம் காணப்படும் எவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள். 2024 மக்களவை தேர்தலில் வாக்களித்தவர்கள் உண்மையான வாக்காளர்கள். அவர்கள் போலி என்றால் ஒன்றியத்தில் உள்ள அரசு ஆட்சி செய்ய உரிமை இல்லை. நாங்கள் இறுதி வரை போராடுவோம். இவ்வாறு மம்தா கூறினார்.
தேர்தல் அதிகாரியுடன் நாளை சந்திப்பு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று எஸ்ஐஆர் தொடர்பாக கட்சி பிரதிநிதிகளை சந்திக்க சம்மதித்து தேர்தல் ஆணையம் மம்தாவுக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளது. அதில் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மற்றும் 4 பேர் கொண்ட குழு நாளை காலை 11 மணிக்கு தேர்தல் அதிகாரியை சந்திக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் பயணம் அரசியல் நாசவேலை: மம்தா குற்றசாட்டு
மம்தா பானர்ஜி நேற்று போங்காவ்னுக்கு ஹெலிகாப்டரில் செல்ல முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சாலை வழியாக சென்றார். இதுகுறித்து மம்தா கூறுகையில்,’நான் இங்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்று(நேற்று) காலை 10 மணியளவில், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு சற்று முன்பு, ஹெலிகாப்டர் பறக்க முடியாது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தேர்தல்கள் இன்னும் தொடங்கவில்லை, ஆனால் மோதல் தொடங்குகிறது. இது அரசியல் நாசவேலை’ என்றார்.