முதலாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு உயிர்களை காப்பாற்ற படியுங்கள்
*மருத்துவக்கல்லூரி டீன் பேச்சு
மதுரை : தேர்ச்சிக்காக இல்லாமல், உயிர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் மாணவர்கள் படிக்க வேண்டும் என, மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் டீன் அருள் சுந்தரேஸ்குமார் பேசினார். மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘தளிர்-25’ என்ற தலைப்பில் அறிமுக வகுப்பு நேற்று நடந்தது. கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் மல்லிகா முன்னிலை வகித்தார். ஆர்எம்ஓ டாக்டர் சரவணன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர், டீன் டாக்டர் அருள்சுந்தரேஸ்குமார் பேசியதாவது:
படிப்புடன், விளையாட்டு உள்ளிட்டவற்றிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். மருத்துவம் என்பது மிக மகத்துவமான தொழில். எப்போதும் மருத்துவம் குறித்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இடைவிடாத பணி அழுத்தத்தை குறைக்க நல்ல பழக்கங்களை கையாளுங்கள். ராகிங்கில் ஈடுபட மாட்டோமென்ற மூத்த மாணவர்களின் உறுதிமொழியால் முதலாமாண்டு மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். எனினும், நம்மை யாராவது துன்புறுத்துவதாகவோ, மிரட்டுவதாகவோ உணர்ந்தால்எங்களது கவனத்திற்கு கொண்டுவாருங்கள். புகார் அளிப்பவர்கள் பெயர் ரகசியம் காக்க்கப்பட்டு, பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். ராகிங் செய்பவர்களை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்வதற்கும் சட்டத்தில் இடமிருக்கிறது. இதை அனைவரும் உணர வேண்டும்.
3 கல்வியில் வெற்றி, தோல்வி சகஜம். தோல்வி தான் நம்மை வழிநடத்தும். விருப்பத்தோடு படியுங்கள். இந்த கல்லூரியில் அனைத்து வசதிகளும் இருக்கிறது. தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக மட்டும் மருத்துவத்தை படிக்காதீர்கள். புரிந்து, உணர்ந்து, உயிர்களை காப்பாற்றும் நோக்கில் படியுங்கள். அப்படி நடந்தால் நம்மை இத்துறையுடன் முழுமையாக இணைத்துக்கொள்ள முடியும். இதன் வாயிலாக நம்மை பார்க்கும் நோயாளிக்கு, இவர் நம்மை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உருவாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக முதலாமாண்டு மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் மலர், இனிப்பு கொடுத்து வரவேற்றனர். உடலுறுப்பு தானத்தை வலியுறுத்தும் வகையில் மாணவர்களே நடித்த ‘மறுபிறவி’ என்ற தலைப்பில் குறும்படம் ஒளிப்பானது.