ஒரு பைக் 150 கிலோ எடை காருக்கு ஏன் 3000 கிலோ? ராகுல்காந்தி கேள்வி
மெடலின்: கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள இஐஏ பல்கலைகழகத்தில் நடந்த கருத்தரங்கில் ராகுல் காந்தி உரையாற்றுகையில்,மாணவர்களிடம் சுவாரஸ்யமான கேள்வியை எழுப்பினார். ‘ஒரு மோட்டார் சைக்கிள் 100 கிலோ எடையும் ஒரு கார் 3000 கிலோ எடையும் இருப்பது ஏன்?. ஒரு பயணியை ஏற்றி செல்ல காரில் 3000 கிலோ உலோகம் தேவை. ஒரு மோட்டார் சைக்கிள் 150 கிலோ உலோகத்துடன் இரண்டு பயணிகளை ஏற்றி செல்ல முடியும்.
காருக்கு 3000 கிலோ தேவைப்படுவது ஏன்?’ என்று கேட்டார். இது வழக்கமான எரி பொருளில் இருந்து இயங்கும் வாகனங்களை மின்சாரத்திற்கு மாற்றுவதில் இதற்கு தொடர்பு இருப்பதாக சிலர் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘‘ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கும் போது இயந்திரம் தனியாக பிரிகிறது. எனவே இயந்திரம் உங்களை காயப்படுத்தாது. அதே சமயம் காரில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால் இயந்திரம் காருக்குள் வருகிறது.
முழு காரும் இயந்திரம் உங்களை கொல்வதை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார மோட்டார்கள் வழக்கமான எரிபொருள் கார்களில் பயன்படுத்தப்படும் மோட்டார்களை வெவ்வேறு இடங்களில் வைக்க அனுமதிக்கிறது. மின்சார மோட்டார் என்பது அதிகாரத்தின் பரவலாக்கம். அது உண்மையில் அதன் செயல் திறனாகும்’’ என்றார்.
* பா.ஜ கிண்டல்
ராகுல் காந்தியின் இந்த கருத்தை பாஜ கிண்டல் செய்துள்ளது. பாஜ செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி,‘‘ ஹார்லி டேவிட்சன் முதல் டொயாட்டோ வரை, வோக்ஸ்வாகன் முதல் போர்டு வரை உள்ள இயந்திர பொறியாளர்கள் ராகுல் காந்தி அளித்த அற்புதமான பொறியியல் ஞானத்தை கேட்டு தங்கள் நெஞ்சில் அடித்து கொண்டிருப்பார்கள். அவரது அறிவை பற்றி நம்பிக் கொண்டிருப்பவர்கள் இதை கேட்ட பிறகு அந்த எண்ணத்தை மறந்து விடுவார்கள்’’ என்றார்.