வார விடுமுறையை கொண்டாட வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இந்த பூங்கா தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
பூங்காவில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். சுற்றுலா பயணிகள் வீட்டிலிருந்து உணவு சமைத்து குடும்பத்துடன் சுற்றிபார்த்து உண்டு மகிழ்வார்கள். வைகை அணை குடும்பத்துடன் சென்று வருவதற்கும், குழந்தைகள் குஷியாக விளையாடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. பிரமாண்டமாக எழுந்து நிற்கும் அணையின் இரண்டு புறங்களும் வலதுகரை பூங்கா, இடதுகரை பூங்காக்கள் உள்ளது. இந்த இரண்டு கரை பூங்காக்களிலும் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளது.
சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, பெரியாறு மாதிரி வைகை பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, பயில்வான் பார்க், யானை சறுக்கல், ஊஞ்சல், மலைகள் போல் அமைக்கப்பட்டு வரைபடங்கள், நீரூற்றுகள், புல்தரைகள், ஆங்காங்கே ஓய்விடங்கள், குழந்தைகள் குஷியாக சென்றுவர உல்லாச ரயில், படகு குழாம், இசையுடன் தண்ணீர் நடனமாடும் வகையில் அமைக்கப்பட்டு இசை நடன நீரூற்று என ஏராளமான அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வைகை அணை பூங்காவில் குவிந்தனர். சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் ஏறி மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். மேலும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் உல்லாச ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
புதிதாக ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதிலும் ஏறி மகிழ்ந்தனர். பூங்காவில் புல்வெளிகளில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடினர். வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதால், மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.