சிஞ்சிருக்கான் Weaver ant
சிஞ்சிருக்கான் (Weaver ant) என்பது ஒரு வகை எறும்பு ஆகும். இதை தையற்கார எறும்பு என்று சொல்வார்கள். இந்த தையற்கார எறும்புகள் மரங்களில் வாழ்கின்றன. அவற்றில் வேலைக்கார எறும்புகள் தாங்கள் வசிக்கும் மரத்தின் இலைகளை வளைத்து அவற்றைப் பட்டுப்போன்ற இழை மூலம் இணைத்து கூட்டை வடிவமைப்பவை. இவற்றை ஒன்றிணைப்பதற்கு எறும்பின் தோற்றுவளரிகள் வெளியிடும் (Larvae) இழைகளைப் பயன்படுத்திக் கொள்ளும். இவற்றில் முதன்மையான வேலைக்கார எறும்புகள் சுமார் 8-10 மிமீ நீளமும், சிறிய எறும்புகள் அவற்றின் அளவில் சுமார் பாதியளவு நீளமும் கொண்டவை.
இந்த எறும்புகள் சிவப்பு நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறங்கள் என இனங்களைப் பொறுத்து நிறத்தில் வேறுபடுகின்றன. இந்த வகையின் ராணி எறும்புகள் பச்சை நிறத்திலும் இறக்கைகளுடனும் இருக்கும். இவை கூட்டைப் பாதுகாப்பதில் கவனமாக இருக்கும். எதிரிகள் வந்தால் விரைந்து கடித்துவிடும். கடிக்கும்போது கடிவாயில் பாமிக் அமிலத்தை செலுத்தும் என்பதால், கடிபட்ட இடத்தில் எரிச்சலுடன் கூடிய வலி ஏற்படும். இது ஓர் இரைக்கொல்லியும்கூட. இவை மரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை வேட்டையாடுவதால் இவை நன்மை செய்யும் பூச்சிகளாக கருதப்படுகின்றன.