‘மன்னிப்பு கேட்கிறோம், கேரளாவுக்கு மீண்டும் வாருங்கள்’: மூணாறில் டாக்சி டிரைவர்களால் பாதிக்கப்பட்ட பேராசிரியைக்கு சமூக வலைதளங்களில் அழைப்பு
திருவனந்தபுரம்: மும்பையைச் சேர்ந்த ஜான்வி என்ற உதவி பேராசிரியை கடந்த சில தினங்களுக்கு முன் நண்பர்கள் சிலருடன் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அப்போது, ஆன்லைன் டாக்சியை அனுமதிக்க மறுத்து உள்ளூர் டாக்சி டிரைவர்கள் ஜான்வியுடன் தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பான ஜான்வியின் சமூகவலைதள பதிவு வைராலானது. அதில், மூணாறில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் இனி கேரளாவுக்கு வர மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து 2 டாக்சி டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு சப் இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் ஜான்வியிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ‘பிரியமான ஜான்வி, நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். மலையாளிகளின் உண்மையான அன்பு குறித்து தெரிந்து கொள்வதற்கும், கேரளாவின் அழகை ரசிப்பதற்கும் நீங்கள் மீண்டும் வரவேண்டும். இவ்வாறு சிலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.