‘மொன்தா’ புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்
திருப்பதி : மொன்தா புயலின் தீவிரம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களில் திருப்பதி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து திருப்பதி கலெக்டர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் வெங்கடேஸ்வர் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்குள்ள நீர்ப்பாசனம், மின்சாரம், ஆர் அண்ட் பி, பஞ்சாயத்து ராஜ், ஆர்டபிள்யூஎஸ், ஆர்டிசி, மருத்துவக் காவல், தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு புயல் ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது: ‘மொன்தா’ புயலை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இன்று, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அது மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். வானிலை ஆய்வுத் துறையின் எச்சரிக்கைகளை அடுத்து அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். புயல் ஏற்பட்டால் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைகளுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஏபிஎஸ்டிசிஎல் தொடர்பான மின் கம்பங்கள் மற்றும் பிற உபகரணங்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். மின் தடைகள் இருக்கக்கூடாது. மின் துறை தொடர்பான அனைத்து ஊழியர்களும் அந்தந்தப் பகுதிகளில் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
நீர்ப்பாசனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் அதிகாரிகள் கள அளவில் பணியாளர்களை நியமித்து, பெரிய திட்டங்கள், சிறு திட்டங்கள் மற்றும் கால்வாய்களின் நீர் மட்டங்களை தொடர்ந்து சரிபார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பான தண்ணீரை வழங்க குடிநீர் டேங்கர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை காரணமாக அனைத்து வகையான அவசர மருந்துகளையும் முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும்.
கட்டுப்பாட்டு அறையில் உள்ள வருவாய் அதிகாரிகள் அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைக்க வேண்டும். மொன்தா புயலை எதிர்த்துப் போராட அனைத்து வகையான நிவாரண நடவடிக்கைகளையும் எடுக்க ஆடிஓக்கள், தாசில்தார்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற துறைகள் ஒருங்கிணைக்க வேண்டும்.
ஜேசிபிக்கள், கிரேன்கள் மற்றும் பிற உபகரணங்களை முன்கூட்டியே வைத்திருக்க வேண்டும். பேருந்துகள் வழக்கமாக ஓடும் பகுதிகளில் உள்ள தரைப்பாலம் மற்றும் பிற தாழ்வான பாலங்களில் தண்ணீர் நிரம்பி வழியும் போது, மாற்றுப் பாதைகள் வழியாக பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதை உறுதி செய்ய ஆர்டிசி அதிகாரிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சுவர்ணமுகி தடுப்பணையில் ஆய்வு
கூடூர் வருவாய் கோட்டத்தில் உள்ள சுவர்ணமுகி தடுப்பணையை கலெக்டர் வெங்கடேஸ்வர் ஆய்வு செய்தார். அப்போது நீர்பாசன அதிகாரிகளிடம் தடுப்பணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்த விவரங்களை விசாரித்தார்.
பின்னர், வகாடு மண்டலத்தில் உள்ள பாலிரெட்டி பாலத்தில் சேதமடைந்த கரையை பழுதுபார்க்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது ஆர்டிஓ பானு பிரகாஷ் ரெட்டி, பயிற்சி கலெக்டர் சந்தீப் ரகுவன்ஷி, கூடூர், வகாடு மண்டல அதிகாரிகள் உடனிருந்தனர்.