நாங்க நல்லா பழகுறோம்; வரி மூலம் இந்தியா எங்களை கொல்கிறது: அதிபர் டிரம்ப் வேதனை
வாஷிங்டன்: இந்தியா மீது விதிக்கப்பட்ட வரிகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறதா என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:
இல்லை. நாங்கள் இந்தியாவுடன் நன்றாகத்தான் பழகுகிறோம். பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு ஒருதலைப்பட்சமாக இருந்தது. இந்தியா எங்களிடம் மிகப்பெரிய வரிகளை வசூலித்து வந்தது. அது உலகிலேயே மிக அதிகமானது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு எந்த வரியையும் விதிக்காமல் வியாபாரம் செய்து வந்தோம். இதனால் இந்தியா அதன் தயாரிப்புகளை இங்கே கொட்டியது.
அவர்கள் 100 சதவீதம் வரி விதிப்பதால் நாங்கள் எதையும் அனுப்ப மாட்டோம். உதாரணத்திற்கு ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கு 200 சதவீத வரி இருப்பதால் அந்த நிறுவனம் இந்தியாவில் தங்கள் பைக்கை விற்பனை செய்ய முடியாது. அதனால் என்ன செய்வார்கள்? அந்த நிறுவனம் இந்தியாவுக்கு சென்று அங்கு தனது ஆலையை கட்டியது. அதனால் அவர்கள் அதிக வரி செலுத்த வேண்டியதில்லை. இது தான் நடந்து வந்தது. இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய 3 நாடுகளும் வரிகளால் எங்களை கொல்கின்றனர்.
இவர்களுடன் ஒப்பிடுகையில் மற்ற நாடுகள் பரவாயில்லை. அவர்கள் வரிகளை குறைத்து விட்டார்கள். இப்போது இந்தியாவும் பூஜ்ஜிய வரிக்கு வருவதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும் 50 சதவீத வரி விதிக்கவில்லை என்றாலும் இது நடந்திருக்குமா? ஆகவே நீங்கள் வரி விதித்தால் நாங்களும் விதிப்போம். பொருளாதார ரீதியாக நாங்கள் வலிமை அடைவோம். இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.