வயநாடு நிலச்சரிவு; பிரதமர் நரேந்திர மோடியுடன் கேரள ஆளுநர் சந்திப்பு!
7வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, மறு சீரமைப்பு பணிகளையும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஒன்றிய அரசு எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் சாதித்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், டெல்லியில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
பிரதமர் உடனான சந்திப்பின்போது கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய மீட்பு பணிகள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் நிலச்சரிவு மற்றும் மீட்பு பணிகளுக்கு பிறகு, மேற்கொள்ளப்படக்கூடிய மறு சீரமைப்பு பணிகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் அவர் எடுத்துக் கூறியிருக்கிறார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்ட பிறகு, நேற்று மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விளக்கம் அளித்து இருந்த நிலையில் இன்று கேரள மாநில ஆளுநர் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.