கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பெரும் கவலையளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி
கேரள மாநில வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை என்ற இடங்களில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த கனமழையால் அதிகாலையில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 குழந்தைகள் உள்பட 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரது நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இன்று அதிகாலை 1 மணிக்கு முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனை அடுத்து 3 மணி நேரத்தில் சூரல் மலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அட்டமலையில் இருந்து முண்டகை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. கடைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பிரதமரின் சமுக வலைதளப்பதிவில்:
வயநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் பிராத்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயிவிஜயனிடம் பேசியதுடன், அங்கு நிலவும் சூழ்நிலையை அடுத்து ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தேன் என கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-உம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.