வயநாடு மலையில் 8 கிமீ நீள இரட்டை குகை பாதை: ரூ. 2134 கோடி செலவில் அமைக்கப்படுகிறது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டுக்கு கோழிக்கோட்டில் இருந்து செல்லும் தாமரைசேரி மலைப்பாதை தான் முக்கியமான பாதையாக உள்ளது. இந்தப் பாதையிலும் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பும் நிலச்சரிவு ஏற்பட்டு சில நாட்கள் இந்தப் பாதையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வயநாடு பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் இங்கு மலையை குடைந்து குகை பாதை அமைக்க வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆனக்காம்பொயில் பகுதியில் தொடங்கி கள்ளாடி வழியாக மேப்பாடி வரை 8.11 கிமீ தொலைவில் இந்த இரட்டை குகை பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இரட்டை குகை பாதை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்கான செலவு ரூ. 2134.50 கோடி ஆகும். 4 வருடங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாதை இந்தியாவிலேயே மூன்றாவது நீளமான குகை பாதையாக மாறும்.