ராட்சத குடிநீர் தொட்டியில் உடைப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன: கேரளாவில் இன்று காலை பரபரப்பு
திருவனந்தபுரம்: கொச்சி நகரின் மைய பகுதியில் 1.35 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி இன்று அதிகாலை திடீரென உடைந்ததில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தம்மனம் பகுதியில் குடிநீர் வழங்கல் வாரியத்தின் சார்பில் 1.35 கோடி கொள்ளளவு கொண்ட பிரமாண்ட ராட்சத குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து தான் கொச்சி நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தொட்டி சுமார் 40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாகும். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென குடிநீர் டேங்கின் ஒரு பகுதி உடைந்து சேதம் அடைந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தொட்டியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனங்கள் உள்பட வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
சில வீடுகளில் காம்பவுண்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன. பிரமாண்ட குடிநீர் தொட்டி உடைந்ததால் கொச்சி நகரில் குடிநீர் வினியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி பழமை காரணமாக உடைந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.