தண்ணீர் திறப்பில் நீர் விரயமாவதை தடுக்க ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் கிளை கால்வாய்களை பராமரிக்க வேண்டும்
*விவசாயிகள் கோரிக்கை
பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீர் கேரள பகுதிக்கு திறந்து விடப்படுகிறது. நடப்பாண்டில், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு, கடந்த மே மாதம் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் திறப்பு வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், அம்பராம்பாளையம், வடக்கலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.
இதில், புதிய ஆயக்கட்டு பாசன பகுதியான பொள்ளாச்சி கால்வாய் மற்றும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பு இருக்கும். நடப்பாண்டில், புதிய ஆயக்கட்டு பாசன பகுதி மெயின் கால்வாயில் கடந்த அக்டோபர் மாதம் துவக்கத்தில் பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டது.
இதையடுத்து, கிளை கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய் பராமரிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், புதிய ஆயக்கடடு பாசன பகுதிக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போனது. ஆனால், புதிய ஆயக்கட்டு பாசன பகுதி பிரதான கால்வாய் பகுதியில் குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரத்துக்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
அதன் பின் கிளை கால்வாய் பராமரிப்பபு பணி மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கடைமடை வரை செல்லும் கிளை கால்வாய்கள் முறையாக பராமரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பல்வேறு இடங்களில் கால்வாயின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்த நிலையில் இருப்பதுடன், புதர்கள் சூழ்ந்த நிலையில் இருப்பது, விவசாயிகள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஆழியார் நீர்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் கூறுகையில், ‘‘ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, ஒவ்வொரு ஆண்டும் 135 நாட்கள் வீதம், சுழற்சி முறையில் 75 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. சுமார் 65 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றளவு தூரமுள்ள புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில், மெயின் கால்வாய்களில், அவ்வப்போது சீரமைப்பு பணி நடந்தாலும், கிளை கால்வாய்களில், அப்பணி முறையாக மேற்கொள்ளாமல் இருப்பது, வேதனையை ஏற்படுத்துகிறது.
புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த 15 ஆண்டுக்கு முன்பு உலக வங்கி கடனுதவி மூலம், சேதமான கால்வாய் சீரமைத்து கான்கிரீட் பாதை ஏற்படுத்தப்பட்டது. அதிலும், சுமார் 70 சதவீத கிளை கால்வாய் பகுதியிலேயே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின், கால்வாயின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்ததால், அதனை முறையாக சீர்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
சில ஆண்டுக்கு முன்பு, குடிமராமத்து திட்டத்தின் கீழ், விவசாயிகள் மூலம் கிளை கால்வாய் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது. தற்போது அந்த திட்டமும் இல்லாததால், பொதுப்பணித்துறை மூலம் ஒதுக்கப்படும் தொகை போதுமானதாக இல்லாததால், கிளை கால்வாய்களை முழுமையாக பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக, கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை.
இந்த சூழ்நிலையில் விரைவில் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் திறப்பு எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு உட்பட்ட கிளை கால்வாய்களில் இன்னும் பல இடங்களில் ஏற்பட்டுள்ள கான்கிரீட் சேதத்தையும், சூழ்ந்துள்ள புதர்களையும் விரைவாக முழுமையாக சீர்படுத்தி, தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.