மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஒருபோக பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு: 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
ஆண்டிபட்டி: மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை அமைந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கடந்த 2 மாதங்களுக்கு முன் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட முதல்போக பாசனத்திற்காக அணையில் இருந்து ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் சரியவில்லை. இந்நிலையில், அணையில் இருந்து
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையேற்று வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி இன்று காலை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டார். இதையடுத்து வினாடிக்கு 1,130 கனஅடி தண்ணீர் வீதம் அணையின் பிரதான 7 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்தது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர்கள் பிரவீன்குமார் (மதுரை), ரஞ்ஜீத் சிங் (தேனி), சரவணன் (திண்டுக்கல்), தேனி தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
120 நாட்களுக்கு திறக்கப்படும்:
அணையில் இருந்து தற்போது ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் 120 நாட்களில் முதல் 45 நாட்களுக்கு தொடர்ந்தும், அடுத்து வரும் 75 நாட்களுக்கு தண்ணீர் இருப்பை பொருத்து முறை வைத்தும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரியாறு பாசனப் பகுதிகளில் உள்ள சுமார் 85,563 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்கள், திருமங்கலம் பிரதான பாசன கால்வாயின் கீழ் உள்ள 19,439 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் பாசன கால்வாயில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.