படிப்படியாக குறைக்கப்பட்டது பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 2000 கனஅடி நீர் வெளியேற்றம்: புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலும் திறப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 33.75 அடி உயரத்துக்கும் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2745 மில்லியன் கன அடியாக உள்ளது. வினாடிக்கு 2600 கன அடி மழைநீர் வந்துகொண்டுள்ளது. பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 47 கன அடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்த வினாடிக்கு 400 கன அடி நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 22.55 அடி உயரத்துக்கும் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3261 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 650 கன அடியாகவும் சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புழல் ஏரியின் 21.20 அடி மொத்த உயரத்தில் 19.12 அடி உயரத்துக்கும் கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2837 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 235 கன அடியாக உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 184 கன அடி விதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 16.84 அடி உயரத்திற்கும் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 799 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 27 கன அடியாக உள்ளது.
கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 34.93 அடி உயரத்திற்கும் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 444 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லை சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. ‘’ஏரியின் மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் தற்போது 10203 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது’’ என்று கொசஸ்தலை ஆறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.