கைகளால் கழிவுகளை அகற்றிய விவகாரத்தில் டெல்லி பொதுப்பணித்துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நுழைவாயில்களின் அருகே உள்ள பாதாள சாக்கடையை பணியாளர் ஒருவர் இறங்கி சுத்தம் செய்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு இருந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,‘‘டெல்லி அரசின் பொதுப்பணித்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி.அஞ்சார்யா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறை செய்திருக்கக் கூடியது மிகப்பெரிய தவறாகும்.
எனவே அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.5 லட்சத்தை அபராதமாக விதிக்கிறோம். இதனை அடுத்த நான்கு வாரத்திற்குள் அபராத தொகையை தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், ‘‘இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.