இனிஷியலை தவிர எனது பெயரை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை; ராமதாசை மதிக்காத அன்புமணி பெயரை மட்டும் ஏன் பயன்படுத்துகிறார்?: அன்புமணியை விமர்சிக்கும் ராமதாஸ் ஆதரவாளர்களால் பரபரப்பு
இது ஒருபக்கம் என்றால், இருவரும் மேடையேறி, ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருவதும், பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இப்படியாக பரபரப்பான சூழல் அரங்கேறிக் கொண்டிருக்க திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார் அன்புமணி. கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான் தான், எனக்குத் தான் நிர்வாகிகளை நீக்கும் சேர்க்கும் அதிகாரம் இருக்கிறது என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது தலைவராக நானே தொடர்கிறேன் என தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் அனுப்பி இருக்கிறார். இது பாமகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருவரது மோதல் போக்கால் பாமகவை வழிநடத்துவது யார்? என்பதில் இருவரும் பிடிவாதமாக உள்ளனர். கட்சியை கையகப்படுத்த இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையத்தையும் நாடி உள்ளனர். பொதுக்குழுவை கூட்டி, எடுக்கும் முடிவுகள் அடிப்படையில் பாமகவின் எதிர்காலம் அமையும் என்று தெரிகிறது. இந்த நிலையில் கும்பகோணத்தில் நேற்று பாமக மாவட்ட பொதுக்குழு கூடியது. அக்கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், ‘‘5 வயது குழந்தையாகிய நான் தான் 3 ஆண்டுகளுக்கு முன்பு அன்புமணியை பாமகவின் தலைவராக ஆக்கினேன். அன்புமணி தனது பெயருக்கு பின்னால் என் பெயரை பயன்படுத்தக்கூடாது. என் பேச்சைக் கேட்காதவர்கள் எனது பெயரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன்.
தேவையென்றால் அன்புமணி எனது பெயரை இனிஷியலாக பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்று பேசினார். அவரது இந்த பேச்சு பாமக தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.அதுமட்டுமல்ல, அன்புமணிக்கு நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கை என்று ராமதாஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இனிமேல் ராமதாஸ் பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்றும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதனால் அன்புமணி, தனது தந்தையான ராமதாஸ் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று பாமக தொண்டர்களுக்கு வெளியிட்ட மடலில் தனது தந்தை ராமதாஸ் பெயரை பயன்படுத்தி இருப்பது ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மடலில், ‘கட்சி எழுப்பிய மருத்துவர் அய்யாவுக்கு வணக்கம்’ என்று கூறியிருக்கிறார். ராமதாசை மதிக்காத அன்புமணி, அவரது பெயரை மட்டும் ஏன் இன்னும் பயன்படுத்துகிறார் என்று ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.