மத்திய கிழக்கில் போர் பதற்றம்; ஏமன் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பத்திரிகையாளர்கள் உள்பட 46 பேர் பலி
சனா: ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 46 பேர் உயிரிழந்த சம்பவம்,ஹவுதி கிளர்ச்சியாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் காசா போர் தொடங்கியதில் இருந்து, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹவுதிகளால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஏமன் தலைநகர் சனா மற்றும் வடக்கு மாகாணமான அல்-ஜாஃப் பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஹவுதிகளின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் கூறினாலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் தாக்கப்பட்டதாக ஹவுதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில், தலைநகர் சனாவில் உள்ள ஊடக அலுவலகங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதில், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டனர்; 147 பேர் காயமடைந்தனர்.
இதேபோல், அல்-ஜாஃப் மாகாணத்தில் அரசு வளாகம் மற்றும் மத்திய வங்கி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர், இதற்குப் பழிவாங்கப்படும் என சபதம் விடுத்துள்ளார். ஏற்கனவே கத்தாரில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.