அட்டகாச ஆட்டத்தால் அசத்தலாய் வென்ற வாங்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன்
ஒடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று, சீன வீராங்கனை வாங் ஸியி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். டென்மார்க்கின் ஒடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில் சீன வீராங்கனை வாங் ஸியி, டென்மார்க் வீராங்கனை லைன் டிராஸ்ட் கிறிஸ்டோபெர்சன் மோதினர். போட்டியின் துவக்கம் முதல் வாங் ஸியியின் ஆதிக்கமே காணப்பட்டது. அற்புதமாக ஆடிய அவர். 21-17 என்ற செட் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆக்ரோஷமாக ஆடிய அவர் 21-14 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் தைவான் வீராங்கனை சியு பின் சியான், ஸ்காட்லாந்து வீராங்கனை கிறிஸ்டி கில்மோர் மோதினர்.
அந்த போட்டியில் இரு வீராங்கனைகளும் சளைக்காமல் மோதியதால் முதல் இரு செட்களில் ஆளுக்கு ஒன்றை வசப்படுத்தினர். தொடர்ந்து நடந்த 3வது செட்டை சியு எளிதில் வென்றார். அதனால், 21-13, 12-21, 21-11 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
* சிராக், சாத்விக் இணை அரையிறுதிக்கு தகுதி
டென்மார்க் ஓபன் பேட்மின்டன் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை, இந்தோனேஷியாவை சேர்ந்த எம்.ஆர்.அர்டியான்டோ, ரஹ்மத் ஹிதாயத் இணையுடன் மோதியது. முதல் செட்டில் துள்ளலுடன் ஆக்ரோஷமாக ஆடிய இந்திய இணை, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் அநாயாசமாக வென்றது. இருப்பினும் 2வது செட்டில் இந்தோனேஷியா இணை பெரும் சவால் எழுப்பியது. அதனால், 18-21 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேஷியா அந்த செட்டை வசப்படுத்தியது. தொடர்ந்து நடந்த 3வது செட்டில் இந்திய வீரர்கள் சுதாரித்து ஆடி மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். கடைசியில் 21-16 என்ற புள்ளிக் கணக்கில் அவர்கள் வெற்றி வாகை சூடினர். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர்கள் அரை இறுதிக்கு முன்னேறினர்.