உலக அலையாத்தி காடுகள் தினத்தையொட்டி அடையாறு முகத்துவார பகுதியில் அலையாத்தி செடிகள் நடவு: அமைச்சர் தங்கம் தென்னரசு நடவு செய்தார்
தமிழ்நாட்டின் கடற்கரை நெடுகிலும் ஆழிப்பேரலை, புயல் மற்றும் கடல் அரிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து கடற்கரையோர வாழ்விடங்களைப் பாதுகாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு, தமிழ் நாடு கால நிலை மாற்ற இயக்கத்தின் கீழ் கடலோர மாவட்டங்களில் உயிர்க் கேடயங்கள் அமைப்பதன் மூலம் கடலோர வாழ்விட மேம்பாடு எனும் திட்டத்தினைத் தொடங்கி 2023-24ம் முதல் 2025-26ம் ஆண்டு வரை ரூ.25 கோடி மதிப்பீட்டில் காலநிலை மாற்றம் இயக்கம் மூலம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம் மற்றும் இதர திட்டங்களின் வாயிலாக இதுவரை மொத்தம் 2436 எக்டர் பரப்பளவிற்கு புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அலையாத்தி மரங்கள் நடவு செய்யப்பட்டு காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்துடன் 1207 எக்டர் பரப்பளவில் ஏற்கெனவே உள்ள அலையாத்திக் காடுகளில் சிதைவுற்ற பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளூர் மக்களை உறுப்பினராகக் கொண்ட கிராம அலையாத்திக் குழுக்களின் பங்களிப்புடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 2025-26ம் ஆண்டில் தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடல் நீர் மட்டம் உயர்வு மற்றும் கடல் அரிமானம் ஏற்படுதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாக உயிர்க் கேடயங்கள் ஏற்படுத்துதல் எனும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின் திட்டம் மூலம் 6 லட்சம் அலையாத்தி மற்றும் அதனை சார்ந்த செடிகள் நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தைகைய முக்கியத்துவம் வாய்ந்த உலக அலையாத்தி காடுகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை அடையாறு முகத்துவாரப் பகுதியில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், அலையாத்தி வகை செடிகளை நடவு செய்து 2025ம் ஆண்டிற்கான உலக அலையாத்தி காடுகள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது சுற்றுச்சூழல் காலநிலை துறை செயலாளர் சுப்ரியா சாகு சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி , முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா , தலைவர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்,எம். ஜெயந்தி, இயக்குநர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் ராகுல் நாத், உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.