சுவர் ஏற முயன்ற ஒருவர் பிடிபட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்தின் அருகே சந்தேக நபர் கைது
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி முடிவடைந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் உயர் பாதுகாப்பு நிறைந்த நாடாளுமன்ற வளாகத்தின் சுவரில் ஏறி குதிக்க முயன்றார். அந்த நபர் குஜராத்தை சேர்ந்தவர். அவரிடம் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 9.30 மணி அளவில் ரயில் பவனுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான ரைசினா சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 20 வயது நபரை மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் கைது செய்து கடமைபாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கைதான நபர் பெங்களூருவில் இருந்து டெல்லி வந்து துபாய்க்கு செல்ல இருந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது. அவரிடமிருந்து எந்த பொருளும் மீட்கப்படவில்லை. அவரது செல்போனில் இருந்து ஆதார் மற்றும் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்து சிஐஎஸ்எப் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மர்ம நபர் சுவர் ஏறி குதிக்க முயன்றதை தொடர்ந்து சிறப்பு பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்பு நடைமுறைகள் அமலில் இருப்பதால், சந்தேகத்திற்கு இடமானவர்கள் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்’’ என்றார்.