வியாசர்பாடி கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
சென்னை: வட சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை கால முன்னெச்சரிக்கைப் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் மோன்தா புயல் உருவாகியுள்ளது. பருவமழை, புயல் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து ஏரிகள், கால்வாய்களை தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில், சென்னை வியாசர்பாடியில் உள்ள கால்வாயில் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். வியாசர்பாடி கால்வாய் தொடங்குமிடமான ஜீரோ பாய்ண்ட்டில் தூர்வாரும் பணிகளையும், கேப்டன் காட்டன் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். மழைப்பொழிவு கூடுதலாக இருந்தாலும் அதனை சமாளிக்கக் கூடிய வகையில் துரித நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கைப் பணிகளும் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.