20 ஆண்டு பணியாற்றிய பிறகு விஆர்எஸ் பெற்றால் விகிதாச்சார ஓய்வூதியம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்ட விதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஊழியர்கள் 20 ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு விருப்ப ஓய்வு பெற்றால் அவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என ஒன்றிய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையை முடித்த பின்னரே வழங்கப்படும். ஆனாலும், 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவையை முடித்த பிறகு விஆர்எஸ் தேர்வு செய்தால், விகிதாச்சார அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். இது தகுதி பெறும் சேவையின் ஆண்டை உறுதி செய்யப்பட்ட ஊதியத்தில் இருந்து 25 ஆல் வகுத்து வழங்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது. மற்ற சலுகைகளை ஓய்வு பெறும் போது பெற முடியும்.