வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கையில் பாஜக செயல்பட்டு வருகிறது: வைகோ, திருமாவளவன் பேச்சு
தண்டையார்பேட்டை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் சென்னை தங்கசாலை மணிகூண்டு அரசு அச்சகம் அருகில் இன்று நடைபெற்றது. சென்னை மேயர் பிரியா தலைமை வகித்தார். சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு, தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், ”தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கையில் பாஜக செயல்பட்டு வருகிறது.
இந்தியர்கள் ஜனநாயகத்திற்கு தகுதியற்றவர்கள் என ஜெர் மனியில் ஹிட்லர் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த நேதாஜி ஹிட்லரிடம் ஜனநாயகத்தை காப் பாற்றுபவர்கள் இந்தியர்கள்தான். நீங்கள் கூறியவற்றை திரும்ப பெறவேண்டும் என தெரிவித்தார். 75 லட்சம் வாக்காளர்களை நீக்குவதற்காக பாஜகவும், பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருகிறது. பாஜகவிற்கு பல்லாக்கு தூக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் சரி, மற்ற அனைத்து கட்சியினரும், இரவில் கனவு காண்பதுபோல கூட்டம் கூடிய நேரத்தில் நாங்கள் ஆட்சி செய்வோம் என கூறுபவர்களும் எஸ்ஐஆருக்கு எதிராக போராடவேண்டும். கரூரில் உயிரிழந்த 41 பேரையும் தன்னை பார்க்க வருமாறு அழைத்து பணம் கொடுத்து சினிமா வசனங்களை பேசியவர் தமிழக முதல்வரை அங்கிள் என அகங்காரத்தில் பேசி வருகிறார்.
நமது வாக்குரிமை மட்டுமல்ல குடியுரிமையை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். எஸ்ஐஆருக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிட்டு வருகிறோம். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு அன்பு காட்டும் பண்புடன் தமிழகம் இருந்து வருகிறது. தமிழகம் வந்துள்ள 75 லட்சம் வாக்காளர்களை தமிழக வாக்களர்கள் பட்டியலில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது” என்றார். விடுதலை சிறுத்தைகள்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், ”ஆர்எஸ்எஸ்யின் கூட்டு நடவடிக்கைதான், இதை ராகுல்காந்தி மு.க.ஸ்டாலின் எதிர்த்து போராடுகிறார்கள். அதற்கு நாங்களும் தொடர்ந்து கூடவே இருப்போம்.” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், ”இன்று காலை புதுடெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
இதில் 13 பேர் இறந்தது வருந்தத்தக்கது. சிறப்பு வாக்களர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் குடியுரிமையை பறிக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் எஸ்ஐஆர் அமுல்படுத்தவேண்டும் என அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை அமுல்படுத்தக்கூடாது என திமுக தலைமையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் பாதுகாப்புக்காக நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார். ஆர்ப்பாட்டத்தில், எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் எம்எல்ஏக்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், வக்கீல் மருதுகணேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாநிதி அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஆவடி ரங்கநாதன், தேவஜவகர், பாண்டி செல்வம், துரைக்கண்ணு மற்றும் தோழமை கட்சி மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், திமுகவினர் கலந்து கொண்டனர்.