வாக்குத் திருட்டு மூலமாக சதி நடக்கிறது தேர்தல் ஆணையத்துடன் பாஜக ரகசிய கூட்டணி: மோடி, அமித் ஷா மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
பச்மாரி: நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அளவில் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். வாக்கு பட்டியல் மற்றும் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இதற்கு பதிலளித்த இந்தியத் தேர்தல் ஆணையம், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்தது. மேலும், முறைகேடுகள் நடந்ததற்கான உரிய ஆதாரங்களுடன் சத்தியப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி கோரியிருந்தது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. அதேபோல், பாஜகவினரும், முக்கியப் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே ராகுல் காந்தி இதுபோன்று பேசுவதாகக் கூறிவந்தனர்.
இந்தச் சூழலில், மத்தியப் பிரதேச மாநிலம் பச்மாரியில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது குற்றச்சாட்டுகளை மீண்டும் கடுமையாக முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘இந்தியாவில் ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த அரியானா சட்டமன்றத் தேர்தலில் மட்டும் சுமார் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
அங்கு பதிவான ஒவ்வொரு எட்டு வாக்குகளிலும் ஒரு வாக்கு மோசடியானதாகும். இதேபோன்ற முறைகேடுகள் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல்களிலும் அரங்கேறியுள்ளன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியோர் ஒரு ரகசியக் கூட்டணியை அமைத்து இந்த ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வருகின்றனர்.
‘எஸ்.ஐ.ஆர்.’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறையைப் பயன்படுத்தி, இந்த வாக்குத் திருட்டை நடத்த முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் தங்களுக்கு வேண்டாத வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதும், புதிய பெயர்களைச் சேர்ப்பதும் எளிதாகிறது. இது தொடர்பான கூடுதல் ஆதாரங்களை ‘எச் ஃபைல்ஸ்’ என்ற பெயரில் தொகுத்து வைத்திருக்கிறேன். அவற்றை விரைவில் படிப்படியாக வெளியிடுவேன்’ என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.