14 நொடியில் 36 ஓட்டுக்கள் நீக்கம் வாக்கு திருட்டு பற்றி மோடி பேசாதது ஏன்? செல்வபெருந்தகை கேள்வி
சேலம்: வாக்கு திருட்டு பற்றி மோடி பேசாதது ஏன்? என செல்வபெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார். சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை, எஸ்.கொல்லப்பட்டியில் வாக்கு திருட்டில் ஈடுபடும் பாஜ, இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ கலந்துகொண்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் வாக்கு திருட்டிற்கு எதிராக கையெழுத்துகளை பெற்றார். தொடர்ந்து செல்வபெருந்தகை எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொருவரின் வாக்கையும் பாதுகாக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில், இந்த வாக்கு திருட்டில் ஈடுபடும் பாஜ மற்றும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். கர்நாடக மாநிலம் மகாதேவபுரத்தில் வாக்கு திருட்டு நடைபெற்றதை தலைவர் ராகுல்காந்தி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். இந்த வாக்கு திருட்டுக்கு பிரதமர் மோடி, தனது மௌனத்தை கலைத்து பதில் கூற வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை டெல்லியில் இருந்து கொண்டு நீக்குகிறார்கள். 14 நொடியில் 36 பேரின் வாக்குகளை நீக்க விண்ணப்பித்துள்ளார்கள். இந்த நீக்கத்திற்கான பாஸ்வேர்டை தனிநபரிடம் கொடுத்தது யார்?. தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே தெரிந்த அந்த பாஸ்வேர்ட் தனியாரிடம் சென்றது எப்படி?. ஜனநாயகத்திற்கு எதிராக இந்த வாக்குத்திருட்டு என்பது மிகப்பெரிய ஊழல். இதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெற இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்று தலைவர்கள் பேசுவதில், அகில இந்திய கமிட்டியின் நிலைப்பாடு தான், எங்களது பாலிசி. அகில இந்திய தலைமை தான் அதனை முடிவு செய்யும். பொதுவெளியில் இதைப்பற்றி பேசக்கூடாது. சிலரது கருத்துக்கள், விருப்பங்கள் பற்றி தேசிய தலைமையிடம் எடுத்துக் கூறுவோம். அவர்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
* அதிமுக கட்டப்பஞ்சாயத்து டெல்லி செல்லணுமா?
‘அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாட்டாமை, கட்டப்பஞ்சாயத்து செய்ய சென்னையில் அவ்வைசண்முகம் சாலையில் அதிமுக அலுவலகம் இருக்கிறது. அங்கு வைத்து பேசலாம். ஆனால், அவர்கள் புதிய அலுவலகமாக டெல்லிக்கு சென்று பேசி இருக்கிறார்கள். அதனால் அதில் பிரச்னை உள்ளது. பிரச்னைக்கு யார் காரணம் என்றால், அது பாஜ தான். தற்போது தமிழ்நாட்டில் இருப்பது அதிமுக அல்ல. அமித்ஷா திமுகவாக மாறிவிட்டது’ என்று செல்வப்பெருந்தகை கூறினார்.