அனல் பறக்கும் வாக்காளர் உரிமை யாத்திரை; வாக்கு திருடர்களே... பதவியை விட்டு விலகுங்கள்: பீகாரில் பாஜகவுக்கு எதிராக சீறிய ராகுல் காந்தி
பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, ‘வாக்குத் திருடர்களே பதவியை விட்டு விலகுங்கள்’ என்று பாஜக அரசுக்கு எதிராக பேசினார். பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கின்றன.
மறுபுறம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணி, மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசை வீழ்த்த வியூகம் வகுத்து வருகிறது. மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய பீகார் சட்டமன்றத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 131 உறுப்பினர்களும், ‘இந்தியா’ கூட்டணிக்கு 111 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த அரசியல் சூழலில், மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை ‘வாக்குத் திருட்டு’ என்று விமர்சித்துள்ள எதிர்கட்சிகள், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 16 நாட்கள் கொண்ட ‘வாக்காளர் உரிமை யாத்திரையை’ தொடங்கியுள்ளனர்.
மக்களவை எதிர்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றுள்ள இந்த யாத்திரை, 20 மாவட்டங்களில் சுமார் 1,300 கிலோமீட்டர் தூரம் பயணித்து வரும் செப்டம்பர் 1ம் தேதி பாட்னாவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் கதிஹாரில் நடைபெற்ற யாத்திரைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஆளும் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ஏழை மக்களின் குரலை மறைக்கும் வகையில் பிரபல ஊடகங்களைக் கையாளுகிறது. வாக்காளர்களின் வாக்குகளை திருடும் வாக்குத் திருடர்களே! பதவியை விட்டு விலகுங்கள். இங்கு கூடியிருக்கும் மக்கள் உங்கள் ஊடகம் அல்ல. மாலையில் தொலைக்காட்சியைப் பாருங்கள்.
இந்த முழக்கத்தையோ, இங்கு கூடியுள்ள ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் கூட்டத்தையோ நீங்கள் அந்த ஊடகங்களில் பார்க்க முடியாது. எனவே நம்முடைய வாக்குகள் திருடப்படுவதை அனுமதிக்கக் கூடாது’ என்று ஆவேசமாகப் பேசினார். தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், ‘சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வழங்குவதற்காக மட்டும் இதுவரை இந்த அரசும், அதிகாரிகளும் 4,000 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர். இந்தப் பணத்தை பாஜகவினர் தேர்தலில் பயன்படுத்துவார்கள். அதனால்தான் ஊழல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற, குற்றமற்ற அரசை கொடுப்போம்’ என்று அவர் உறுதியளித்தார்.