வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் முறைகேடு; தேர்தல் ஆணையத்துடன் மேற்குவங்க அரசு மோதல்: 5 அதிகாரிகள் டிஸ்மிஸ்; எப்ஐஆர் பதிய தயக்கம்
கொல்கத்தா: வாக்காளர் பட்டியல் முறைகேடு புகாரில் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை முழுமையாக ஏற்க மறுத்துள்ள மேற்குவங்க மாநில அரசு, சம்பந்தப்பட்ட 4 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்ததோடு நிறுத்திக்கொண்டு, அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தின் மொய்னா மற்றும் பருய்பூர் பூர்பா சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, இரண்டு தேர்தல் பதிவு அதிகாரிகள், இரண்டு உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் மற்றும் ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் என ஐந்து பேர் மீது தேர்தல் ஆணையம் நேரடியாகக் குற்றம் சாட்டியது.
அவர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம், மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தலைமை தேர்தல் ஆணையம் பாஜகவின் கொத்தடிமையாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது அரசு ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், தலைமை தேர்தல் ஆணையம் விதித்த ஆகஸ்ட் 21ம் தேதி கெடு நேற்றோடு முடிவடைந்த நிலையில், மாநில அரசு தற்போது பணிந்துள்ளது. முறைகேடு புகாரில் சிக்கிய இரண்டு தேர்தல் பதிவு அதிகாரிகள், இரண்டு உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் என நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்தும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டரைப் பணிநீக்கம் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்த தகவலை மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். இருப்பினும், தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டபடி அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. இது தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை முழுமையாக நிறைவேற்றாத செயலாகும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 5 அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கவும், மாநில அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.