உயிரோடு இருப்பவர் இறந்துவிட்டதாக அறிவிப்பு வாக்காளர் பட்டியலில் நாதக வேட்பாளர் நீக்கம்: சிவகங்கையில் சீமான் கட்சிக்கு வந்த சோதனை
சிவகங்கை: சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர், அவரது கணவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் என நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் பணி நடைபெற்று வருகிறது. நிலை அலுவலர்களிடம் வழங்கிய படிவங்கள் அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. செயலியில் ஏற்றப்பட்ட வாக்காளர் பட்டியல்களில் இடம் பெயர்தல், இறந்தவர்கள் அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பாக முகவர்களிடம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இதில் சிவகங்கை நகராட்சி 7வது வார்டில் வசிக்கும் நாதக சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துஜா, இவரது கணவர் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள், இறந்தவர்கள் என குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருவருமே கடந்த 2 வாரங்களுக்கு முன்பே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான படிவங்களை நிரப்பி வழங்கியுள்ளனர். தற்போது இறந்தவர்கள் பட்டியலில் பெயர் இடம் பெற்றதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருவரும் புகார் அளிக்க வந்தனர். அலுவலக வளாகத்தில் கலெக்டர் பொற்கொடி வந்தபோது அவரிடம், ‘‘எங்கள் பெயர் இறந்தவர்கள் பட்டியலில் உள்ளது’’ எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கலெக்டர், ‘‘இது நிர்வாக பிழை, விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நீக்கப்பட்ட பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்’’ என்றார். ஒரு கட்சி அறிவித்த வேட்பாளரே இறந்துவிட்டதாக தெரிவித்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.