வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு பாஜ கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்: திருமாவளவன் குற்றச்சாட்டு
திருச்சி: பாஜவின் முழுமையான கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் சிக்கியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லுமுல்லு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக பாஜவுக்கு எதிராக வாக்களிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை வாக்காளர்களாக சேர்ப்பது போன்ற செயல்கள் நடந்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு இருக்கிறது. பாஜவின் முழுமையான கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் சிக்கியுள்ளது. பாஜ எந்த தில்லுமுல்லையும் செய்யும். தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் லட்சக்கணக்கில் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் சூழலில், அவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கு முயற்சி நடந்து வருவதாக தகவல் வருகிறது. இதுதொடர்பாக தமிழக முதல்வர், அனைத்து கட்சி கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* ஆணவக்கொலை தடுக்க தனிச்சட்டம் 9,10ம் தேதியில் விசிக ஆர்ப்பாட்டம்
திருமாவளவன் கூறுகையில், ‘ஆணவ படுகொலைகளை தடுக்க தனிசட்டம் இயற்ற வேண்டுமெனவலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசியதுடன் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் ஒன்றிய அரசு பொருட்படுத்தவில்லை. இதை வலியுறுத்தி வரும் 9, 11ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் 9ம்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன். மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்’ என்றார்.