செப். 30ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; பீகாரில் 98.2% வாக்காளர்களின் ஆவணம் சரிபார்ப்பு: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் கீழ் வாக்காளர்களின் ஆவணங்களைப் பெறும் பணி கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்புப் பணி கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், வாக்காளர்களின் ஆவணங்களைப் பெறும் பணி கடந்த 60 நாட்களாக நடைபெற்று வந்தது. வரும் 24ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள 98.2 சதவீத வாக்காளர்களின் ஆவணங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் தினமும் சராசரியாக 1.64 சதவீதம் என்ற அளவில் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் இந்த ஆவணங்களைச் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியானது 243 தேர்தல் பதிவு அலுவலர்கள் மற்றும் 2,976 உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது, இந்த சிறப்புத் திட்டம் முடிவடைய இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில், வெறும் 1.8 சதவீத வாக்காளர்களின் ஆவணங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. செப்டம்பர் 1ம் தேதிக்குள் இந்தப் பணியும் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள 7.24 கோடி வாக்காளர்களில், இதுவரை 0.16 சதவீத கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளன. மேலும், 18 வயது பூர்த்தியடைந்த 3,28,847 புதிய வாக்காளர்கள் தங்களது விண்ணப்பப் படிவம் 6 மற்றும் உறுதிமொழியைச் சமர்ப்பித்துள்ளனர். அக்டோபர் 1ம் தேதி 18 வயதை எட்டுபவர்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெறப்பட்ட அனைத்து கோரிக்கைகள், ஆட்சேபனைகள் மற்றும் தகுதி ஆவணங்களின் சரிபார்ப்புப் பணிகள் செப்டம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து சரிபார்ப்புகளுக்கும் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்பின் பீகாரில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.