வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில் குடியுரிமையை தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்
புதுடெல்லி: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி பீகார் மாநிலத்தில் சுமார் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது மிகப்பெரும் அரசியல் பூதாகரத்தை கிளப்பியது. இருப்பினும் கடந்த 1ம் தேதி திட்டமிட்டபடி வாக்காளர் திருத்த பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர்கள் வழக்கு தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராகேஷ் திவேதி, இந்திரா ஜெய்சிங் ஆகியோர் வாதிட்டனர்.
அவர்கள் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். எந்தெந்த அடிப்படையில் அவர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். குறிப்பாக 1950ம் ஆண்டுக்கு பின்பாக பிறந்தவர்கள் அனைவரும் இந்திய குடியுரிமை பெறுகிறார்கள். ஆனால் இந்த பட்டியலை பொறுத்தவரையில் பலர் நீக்கப்பட்டும் உள்ளனர். முறையான நடைமுறையை கடைபிடிக்காமல் இந்த வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு தேர்தல் ஆணையம் தயாரித்து இருக்கக்கூடிய இந்த வரைவு பட்டியல் எப்படி நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க முடியும்.
மேலும் கடந்த பல தேர்தல்களில் வாக்களித்தவர்கள் தற்போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இது எவ்வாறான நடைமுறை, எந்த மாதிரியான ஆவணங்கள் கேட்க வேண்டும், எந்த ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்வது நாடாளுமன்றம் ஆகும். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த விதியை மீறி செயல்பட்டு உள்ளது.ஆதாரை ஆவணமாக ஏற்க ஏன் தேர்தல் ஆணையம் தயங்குகிறது என்பது புரியவில்லை.ஏனெனில் ஆதார் மட்டுமே ஒருவரின் குடியுரிமையை உறுதிப்படுத்துவது என்று கூற முடியாது. எனவே அதனை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் முழு நடைமுறையும் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல. குறிப்பாக குடியுரிமையை தீர்மானிப்பது என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் வராத ஒன்று ஆகும். மேலும் குடியுரிமை அடிப்படையில் மக்களை நீக்குவதற்கு ஒரு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு நாங்கள் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் செய்கிறோம். நீக்குவோம் என்று அவர்களால் கூற முடியாது.மேலும் தேர்தல் ஆணையம் 5 கோடி வாக்காளர்களையும் தகுதி இல்லாதவர்கள் என்று நீக்கி விட்டு அவர்களுக்கு இரண்டரை மாதங்கள் அவகாசம் வழங்கி, தங்களது குடியுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினால் என்ன செய்ய முடியும்.
மேலும் குடியுரிமையை தீர்மானிக்கும் நபராக தேர்தல் ஆணையம் இருக்க முடியாது. நாங்கள் இந்த விவகாரத்தில் ஜனநாயகத்தை எதிர்பார்க்கிறோம். ஆனால் தேர்தல் ஆணையம் குறுக்கு வழியில் செயல்பட நினைக்கிறது. அந்த வகையில் தான் தற்போதைய சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தவறானது என்று கூறுகிறோம் என்று தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘நீங்கள் உள்ளூரில் வசிக்கக் கூடியவரா, இல்லையா என்பதை சரி பார்க்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை தானே’’ என்று கேட்டனர். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘‘ஆதார் அடையாள அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட எந்த ஒரு ஆவணங்களையும் இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்று பதிலளித்தார்.
அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி, ‘‘குறிப்பாக ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் . இருப்பினும் நீங்கள் குறிப்பிடும் ஆவணங்கள் இருப்பிட ஆவணங்களாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஆனால் அந்த ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் உண்மையானதா, போலியானதா என தேர்தல் ஆணையம் ஆராயும் போது அதை உறுதிப்படுத்தும் வகையில் மற்ற ஆதாரங்களை நீங்கள் கொடுக்க வேண்டியது தானே? அதில் என்ன உங்களுக்கு பிரச்னை இருக்கிறது’’ என்று கேட்டார். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,‘‘‘அப்படியான ஆவணங்கள் எதையுமே அவர்கள் ஏற்க மறுக்கின்றார்கள்’’ என பதிலளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்க வேண்டுமென்றால் அதற்கான முறையான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். குறிப்பாக உண்மை நிலவரத்தை அடிப்படையாக கொண்டு தான் செயல்படுத்த முடியும். உயிருடன் இல்லாதவர்கள் எத்தனை பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் தகவல் இருக்கிறதா?. மேலும் இதுபோன்ற தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்பது மட்டுமில்லாமல், மீண்டும் நடக்காமல் மிக உன்னிப்பாக தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.
மேலும் இந்த விவகாரத்தில் மனுதாரர் கூறுவது போன்று 5 கோடி வாக்காளர்களை நீக்கினால் நீதிமன்றம் ஒன்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதேவேளையில் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய இந்த நடைமுறையில் ஏதேனும் சட்டவிரோதம் இருப்பதாக கண்டறியப்பட்டால், தேர்தல் நெருங்கும் செப்டம்பர் மாத இறுதியாக இருந்தாலும் கூட ஒட்டுமொத்த இந்த நடைமுறையும் ரத்து செய்யப்படும். குடியுரிமை வழங்குவது அல்லது குடியுரிமையை பறிப்பது தொடர்பான சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் அதிகாரம் தான். ஆனால் குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது மற்றும் விலக்குவது என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
* நீதிமன்றத்துக்கு வந்த இறந்த வாக்காளர்கள்
மனுதாரர் தரப்பில் வாதாடும்போது,, ஒரு வாக்குச்சாவடியில் 12 பேர் இறந்து விட்டதாக கூறி அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள். அப்படியெனில் பூத் லெவல் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எப்படி இத்தனை தவறுகள் நடந்தது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்த நடைமுறையே தவறானது என்பது எங்களது தரப்பு வாதமாக உள்ளது. மேலும் தற்போது இந்த நீதிமன்றத்திற்கு முன்பாக நிற்கும் 2 பேர் யார் என்று கேட்டால் அதுவே ஆச்சரியமாக இருக்கும், ஏனெனில் ஒரு வாக்கு மையத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்து விட்டார்கள் என்று கூறி நீக்கப்பட்டவர்கள் தான் தற்போது நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள் என்றனர்.
* ‘சிறு தவறுகள் இருக்கத்தான் செய்யும்’ தேர்தல் ஆணையம் ஒப்புதல்
தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘பெரிய அளவிலான இதுபோன்ற ஒரு நடவடிக்கை மேற்கொள்ளும் போது சிறு தவறுகள் இருக்க தான் செய்யும். ஆனால் உயிரோடு இல்லாதவர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எனவே தான் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அது எப்படி தவறாகும்.மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் அது தொடர்பாக மீண்டும் அவர்கள் முறையிட முடியும். தற்போது வெளியிடப்பட்டிருப்பது ஒரு வரைவு பட்டியல் தான். இதில் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீண்டும் அணுகுவதற்கான ஏற்பாடு உள்ளது.அதே வேளையில் இறந்தவரை உயிருடன் இருக்கிறார் என்று எப்படி கருதி வாக்காளர் பட்டியலில் வைத்திருக்க முடியும் என்று தெரிவித்தார்.