வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை சில கட்சிகள் தவறான தகவல் பரப்புகின்றன: தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
புதுடெல்லி: ‘‘இரட்டை வாக்குப்பதிவு, வாக்கு திருட்டு போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தமானது அனைத்து குறைபாடுகளையும் நீக்குவதை நோக்கமாக கொண்டது. இதில் சில கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன’’ என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறி உள்ளார். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், பாஜவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றன.
பல்வேறு சட்டப்பேரவை தேர்தல்களில் இரட்டை வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும், வாக்கு திருட்டு நடப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சில கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது மிகவும் கவலை அளிக்கிறது.
சில அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கியை வைத்து அரசியல் செய்கின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நீக்குவதே தீவிர திருத்தத்தின் நோக்கம். இதை வெளிப்படையான முறையில் வெற்றி பெறச் செய்ய அனைத்து தரப்பினரும் பாடுபடுகிறார்கள். பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க இன்னும் 15 நாட்கள் உள்ளன. இந்த வாய்ப்பை அனைத்து கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அழைக்கிறேன்.
தேர்தல் ஆணையத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்திருக்கும். அரசியல் கட்சிகள் இடையே தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்ட முடியாது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையுமே நாங்கள் சமமாக பார்க்கிறோம். தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் சந்தேகம் குறித்து மனுக்கள் தாக்கல் செய்யப்படாமல், வாக்கு திருட்டு என குற்றம்சாட்டுவது அரசியலமைப்பை அவமதிப்பதாகும்.
தேர்தலில் இரட்டை வாக்குப்பதிவு, வாக்கு திருட்டு என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. யாரோ ஒருவர் கூறிவதால் சூரியன் தினமும் கிழக்கில் உதிப்பதில்லை. எனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக தேர்தல் ஆணையமோ, வாக்காளர்களோ பயப்படவில்லை. சிலர் விளையாடும் அரசியலைப் பற்றி கவலைப்படாமல், தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் உறுதியாக நிற்கிறது. மீண்டும் மீண்டும் ஒரே பொய்யை சொல்வதால் அது உண்மையாகி விடாது. குற்றம்சாட்டுவது யாருடைய கட்சி என்பதை பொருட்படுத்தாமல் தேர்தல் ஆணையம் கவலையின்றி அதன் ஜனநாயக கடமையை நிறைவேற்றும்.
மக்களவை தேர்தலின்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்தனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலுக்கு பணியாற்றினர். இவ்வளவு வெளிப்படையான நடைமுறையில் இவ்வளவு மக்கள் முன்னிலையில் நடத்தப்படும் இந்த செயல்பாட்டில் வாக்குகளை எப்படி திருட முடியும்?
சிலர் தெரிந்தோ தெரியாமலோ அல்லது மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்வு காரணமாக இரட்டை வாக்காளர் அட்டைகளை வைத்துள்ளனர். இதனால் சிறப்பு தீவிர திருத்தம் அவசியமாகிறது. மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பது கட்டுக்கதை. ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாக வாக்காளர் பட்டியலை சரிசெய்வது தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ கடமை. இவ்வாறு அவர் கூறினார்.
* பெண் வாக்காளர்கள் இருப்பதால் சிசிடிவி பதிவு வெளியிட முடியாது
கள்ள ஓட்டு புகார்கள் தொடர்பாக வாக்குச்சாவடியில் பதிலான சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். மேலும், வாக்குப்பதிவு முடிவடைந்த 45 நாளில் சிசிடிவி பதிவுகள் அழிக்கப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்குச்சாவடி சிசிடிவி பதிவில் வாக்களிக்க வரும் பெண்களின் உருவங்கள் பதிவாகி இருக்கும். அதை எப்படி வெளியிட முடியும். உங்கள். தாய், மனைவி, சகோதரி, மகளின் படத்தை வெளியிடச் சொல்வீர்களா? அப்படி சிசிடிவி காட்சிகளை வெளியிடுவது பெண்களின் தனியுரிமையை மீறும் செயலாகும் என்றார்.
அப்படியென்றால், அந்த பெண்களின் அனுமதி பெற்றுதான் தேர்தல் ஆணையம் சிசிடிவியில் அவர்களை பதிவு செய்கிறதா? என்று நெட்டிசன்கள் தேர்தல் ஆணையத்தை வறுத்தெடுத்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தள பதிவில், சிசிடிவி கேமராக்களை வாக்குச்சாவடிகளில் பொருத்தும் முன் ஒவ்வொரு பெண் வாக்காளரிடமும் தேர்தல் ஆணையம் அனுமதி பெற்றதா? வாக்குச்சாவடி ஒன்றும் உடை மாற்றும் அறை அல்லவே. தேர்தல் ஆணையத்திடம் வெளிப்படைத்தன்மையைதான் எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற சால்ஜாப்புகளை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
* ராகுலுக்கு 7 நாள் கெடு
கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதன் மூலம் வாக்கு திருட்டு நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகையில், ‘‘சம்மந்தப்பட்ட தொகுதியின் வாக்காளராக இல்லாமல் வெளிநபர்கள் புகார் அளிக்க விரும்பினால், அவர்கள் கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி 7 நாட்களில் ராகுல் காந்தி பிரமாணபத்திரத்தை சமர்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றதாகவும் செல்லாததாகவும் கருதப்படும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.
* திறமையின்மை, பாரபட்சம் அம்பலமாகி உள்ளது: காங்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையை தொடங்கிய சிறிது நேரத்தில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை என கூறித் தொடங்கி உள்ளது. இதற்கு நேர்மாறான ஆதாரங்கள் இருந்த போதிலும் இது நகைப்புக்குரியது. ராகுல் காந்தியின் கூர்மையான கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் அர்த்தமுள்ள வகையில் பதிலளிக்கவில்லை.
தேர்தல் ஆணையத்தின் சொந்த தரவுகளை அடிப்படையாக வைத்தே ராகுல் காந்தி ஆதாரங்களை விளக்கி உள்ளார். எனவே தேர்தல் ஆணையத்தின் விளக்கங்கள் அதன் திறமையின்மைக்கு மட்டுமல்ல வெளிப்படையான பாகுபாட்டையும் அம்பலப்படுத்தி உள்ளது. பீகார் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை தேர்தல் ஆணையம் செயல்படுத்துமா என்பதுதான் இப்போது முக்கியமான கேள்வி’’ என கூறி உள்ளார்.
* நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரம் வெளியீடு
பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 56 மணி நேரத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத வாக்காளர்களின் பெயர்கள் மாவட்ட தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறி உள்ளார்.