பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை; ராகுல், பிரியங்கா, ரேவந்த் தேஜஸ்வி பங்கேற்பு: ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனம்
பாட்னா: பீகாரில் நடைபெற்ற வாக்காளர் உரிமை யாத்திரையில் ராகுல், பிரியங்கா, ரேவந்த், தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். பீகாரில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்கு திருட்டை கண்டித்தும் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‘வாக்காளர் உரிமை யாத்திரை நடைபெற்று வருகிறது. கடந்த 24ம் தேதி அராரியாவில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகக் கடுமையாகச் சாடினார். மேலும், ‘தேர்தல் ஆணையம் தற்போது பாஜகவின் கிளை போல செயல்படுகிறது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைக் காக்கவே நானும் ராகுல் காந்தியும் இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளோம்.
மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது. இந்த யாத்திரை, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் உண்மை முகத்தை மக்கள் முன் அம்பலப்படுத்தியுள்ளது’ என்றார். இந்நிலையில் இன்று சுபால் மாவட்டத்தை யாத்திரை அடைந்தது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் பீகார் மாநிலப் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லாவரு, ‘கடந்த தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெறாமல் இருந்திருந்தால், இன்று காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்திருக்கும். வாக்குத் திருட்டு காரணமாகவே ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கான ஆதாரங்களை வைத்துள்ளோம்.
அதனால்தான் அவர்களை ‘வாக்குத் திருடர்கள் - ஆட்சியைக் கைப்பற்றிய திருடர்கள்’ என்று கூறுகிறோம்’ என்றார். 16 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை, 20 மாவட்டங்களில் 1,300 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்து, செப்டம்பர் 1ம் தேதி பாட்னாவில் நிறைவடைய உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த யாத்திரையில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.