வாக்காளர் பட்டியல் தயாரிப்பது கலெக்டராம்... முறைகேடு குறித்து எடப்பாடி புதுஉருட்டு
விருதுநகர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை 9 மணிக்கு சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சக அதிபர்களை சந்தித்து கலந்துரையாடினார். பட்டாசு ஆலை தொழிலாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் சிவகாசியில் இருந்து விருதுநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சென்றார்.
சாத்தூர் முக்குராந்தலில், வேனின் மீது நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். இப்போது ஆட்சியில் இருப்பது திமுகதானே? அவர்களிடம் தானே அதிகாரம் இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவை மாவட்ட ஆட்சியரின் பணி.
அதில் இப்போது அதிமுக என்ன செய்ய முடியும்? அதிமுக, பாஜ கூட்டணி வைத்ததும் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் மடைமாற்றம் செய்கிறார் துரைமுருகன்’’ என்று தெரிவித்தார். தேர்தல் ஆணையத்துடன் பாஜ கூட்டு வைத்து, வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடத்தியதாக ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றம்சாட்டி உள்ளார். சிறப்பு தீவிர திருத்தத்திலும் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுபற்றி நேரடியாக கண்டனமோ, கருத்தோ சொல்லாமல் பாஜ ஆதரவாக எடப்பாடி கருத்து தெரிவித்து உள்ளார். தேர்தல் என்று வந்தால் அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுவார்கள். மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் அதிகாரிகளாக மாறுவார்கள். இது கூட தெரியாமல் கூட்டணியில் உள்ளதால் பாஜவுக்கு வலிக்காமல் அதிகாரிகள் மீது எடப்பாடி குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.