தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் பல்வேறு குளறுபடி பீகார் வாக்காளர்களுக்கு தமிழகத்திலும் ஓட்டு; அந்த மாநில எஸ்ஐஆர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தாலே போதும்

* தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள், மக்கள் கடும் எதிர்ப்பு

Advertisement

சென்னை: பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆரில் பெயர் இடம் பெற்றிருந்தால், தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், இதற்கு தேர்தல் ஆணையம் வாய் திறக்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். ‘வந்தாரை வாழ வைக்கும் ஊர்’ என்ற பெயர் தமிழ்நாட்டுக்கு உண்டு.

இதற்கு காரணம் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட தொழில் மற்றும் வணிக நகரங்களில் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாநகரில் வடமாநில தொழிலாளர்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. திருப்பூரில் தினமும் வேலை, கைநிறைய சம்பளம், உணவு, தங்குமிடம், வாகன வசதி உள்ளிட்ட சலுகைகள் வேறு கொடுப்பதால், வடமாநிலத்தவர்கள் மறுவாழ்வு இடமாக மாறி உள்ளது.

வடமாநில தொழிலாளர்களின் முதல் தேர்வு திருப்பூராகவும், தொழில் பனியன் தொழிலாகவுமே இருந்து வருகிறது. இங்கு இவர்களுக்கு வாரம்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் வழங்கப்படுகிறது. இதுபோன்று தீபாவளி போனஸ் போன்றவையும் தொழிலாளர்களுக்கு ஆயிரக்கணக்கில் வழங்கப்படுகிறது. இதனால் பல ஆண்டுகளாக திருப்பூரில் தமிழர்களை போன்று வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் லட்சக்கணக்கானோர் தங்கி வேலைசெய்து வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், இன்ஜினீயரிங், பம்புசெட், லேத் ஒர்க்‌ஷாப் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 2 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பல ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தவிர, கட்டுமான துறை, ஓட்டல், ஜவுளி, வேளாண் என இதர துறைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் கனிசமாக உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முழுக்க முழுக்க மலைப்பிரதேசம். சுற்றுலா பயணிகள் வரத்து மூலம் மட்டுமே இம்மாவட்ட மக்கள் வருவாய் பார்க்கின்றனர். இங்குள்ள பிரதான தொழில் தேயிலை. இந்த தேயிலை தோட்டங்களில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதுதவிர, தமிழ்நாட்டின் இதயமாக திகழும் விவசாயத்திலும் வடமாநில தொழிலாளர்கள் தற்போது களமிறங்கி உள்ளனர். இதேபோல், கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தொழிலிலும் கால்பதித்து கடலுக்கு சென்று தமிழக மண்வாசனையோடு வடமாநிலத்தவர்கள் கலந்து உள்ளனர்.

வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள வேலையின்மை காரணமாக தமிழ்நாட்டிற்கு வடமாநில தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக படையெடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டை நம்பி வரும் அவர்களை தமிழ்நாடு ஏமாற்றுவதில்லை. இன்றைக்கு தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் டீ கடை முதல் தொழிற்சாலைகள் வரை வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தீபாவளி, ஹோலி மற்றும் தேர்தல் நேரங்களில் மட்டுமே சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். மற்ற நாட்களில் அவர்களின் சொர்க்க பூமியாக தமிழ்நாடுதான் உள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் தேர்தல் நேரங்களில் ஓட்டு போட மட்டும் ஊருக்கு செல்வதற்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பல ஆண்டுகளாக இங்கு வசிக்கும் வடமாநிலத்தவர்கள் தங்களது முகவரியை தமிழ்நாட்டிற்கு மாற்றி ஓட்டுரிமையை பெற்று உள்ளனர். இந்த வாக்காளர்கள் பலரும் கடந்த எம்.பி. தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலின்போதும் வாக்களித்தனர். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) பணியில் ஏற்கனவே வாக்காளர்களாக உள்ள வடமாநிலத்தினருக்கு படிவம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த படிவத்தை முறையாக பூர்த்தி செய்து கொடுத்து அவர்கள் தங்கள் வாக்குரிமை தமிழ்நாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்கான பணியை செய்து வருகின்றனர். இப்பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்த பிறகு, புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கும்போது, வடமாநில தொழிலாளர்கள் சுமார் 15 முதல் 20 சதவீதம் பேர் வரை பட்டியலில் புதிதாக சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, தற்போதைய எஸ்.ஐ.ஆர் திருத்த பணியில் இந்தியர் என நிரூபித்து ஓட்டு போட வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காட்டி ஓட்டுரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த எஸ்.ஐ.ஆர் பணியே சொந்த ஊரில் ஓட்டு என்பதை மாற்றி எந்த ஊரிலும் ஓட்டு என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால், ஒருவர் சொந்த ஊரில் ஓட்டு இல்லாமல், பணியாற்றும் எந்த ஊரிலும் ஓட்டுரிமையை பெற்றுக்கொள்ளலாம் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

ஆனால், போலி வாக்காளர்கள், உயிரிழந்தவர்கள், இருமுறை வாக்கு உள்ளவர்கள் என பல்வேறு திருத்தங்கள் செய்யவே இந்த பணி என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. வழக்கமாக இந்த பணியைதான் தேர்தல் ஆணையம் தேர்தல் நேரங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து செய்து வருகிறது. அப்படியென்றால் இவ்வளவு போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்காமல் தேர்தல் நடத்தியதா? என்ற கேள்வி எழுகிறது. எஸ்.ஐ.ஆர் பணியே, பாஜ ஆளாத தென் மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்களை வாக்காளர்களாக மாற்றி கால் பதிக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.

இதைத்தான் தேர்தல் ஆணையத்துடன் கூட்டு வைத்து பாஜ செயல்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதை உறுதி செய்யும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் எஸ்.ஐ.ஆர் பணியில் 13வது ஆவணமாக ஒன்றை தேர்தல் ஆணையம் சேர்த்து உள்ளது. அது என்னவென்றால், ‘1.7.2025 தகுதியேற்பு நாளாக கொண்ட பீகாரின் சிறப்பு தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதியில் உங்கள் பெயர் இருந்தால், தமிழ்நாட்டில் நடக்கும் எஸ்.ஐ.ஆர் பணியில் அந்த ஆவணத்தை சமர்ப்பித்து ஓட்டுரிமையை பெற்று கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் தற்போதுதான் தேர்தல் முடிந்து உள்ளது. இந்த தேர்தலில் ஓட்டு போட்ட தொழிலாளர்கள், தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றால் 6 மாதத்தில் இருமாநில தேர்தல்களில் ஓட்டு போட முடியும். இது முறைகேடா? இல்லையா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். சமீபத்தில், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் நடந்த வாக்கு திருட்டு குறித்தும், அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்தது குறித்தும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு தேர்தல் ஆணையம் இதுவரை தெளிவான விளக்கத்தை அளித்து முறைகேடு நடக்கவில்லை என்று நிரூபிக்கவில்லை. மாறாக ராகுலை அச்சுறுத்தும் வகையில், புகார் குறித்து கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய ராகுலுக்கு உத்தரவிட்டது. ராகுல் வெளியிட்ட பல்வேறு புகார்களை ஒப்பிட்டால் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற முறைகேடாக வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக மாற்றும் முயற்சி நடக்கிறதா என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர். இதோ அந்த கேள்விகள்:

* தமிழ்நாட்டில் வசிக்கும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிரந்தர வீடோ அல்லது தற்காலிக வீடோ இல்லை. அவ்வாறு இருக்கையில் இவர்கள் எந்த முகவரியை கொடுத்து வாக்குரிமை வாங்குவார்கள்?

* கூலி தொழிலாளர்களாக வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள், தொழிற்சாலை அருகில் உள்ள காலி இடங்களில் குடிசையையோ, குடிலோ அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எந்த அடிப்படையில் ஓட்டுரிமை வழங்கப்படும்?

* கர்நாடகாவில் ஒரு 10x10 அறை கொண்ட முகவரியில் 80 ஓட்டுகள் இருந்ததாக ராகுல் ஆதாரத்துடன் வெளியிட்டார். தமிழ்நாட்டிலும் இதேபோல் சிறிய அறையில்தான் கும்பல் கும்பலாக தொழிலாளர்கள் தங்கி இருக்கின்றனர். கர்நாடகாவை போல் ஒரே அறை முகவரியில் 80 ஓட்டுக்கள் வழங்கப்படுமா?

* பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் இங்கு முகவரி சான்று பெற்றுள்ளனர். பிழைப்புக்காக வந்த தொழிலாளர்கள் ஏராளமானோருக்கு முகவரி சான்றே கிடையாது. இவர்களுக்கு எந்த அடிப்படையில் ஓட்டு வழங்கப்படும்?

* முகவரி சான்று இல்லாதவர்களை முறைகேடாக சேர்க்கத்தான் பீகார் எஸ்ஐஆரில் பெயர் இருந்தால், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறதா?

* வடமாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக வந்து உள்ள தொழிலாளர்கள் தொடக்க கல்வியை கூட முடிக்காதவர்கள். அவர்கள் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் கையில் வைத்திருக்கவில்லை. இதெல்லாம் இல்லாத இவர்கள், இந்திய குடிமகன் என்று எப்படி நிரூபித்து தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறுவார்கள்?

* தற்போதைய தொழில்நுட்பங்களுடன் பல்வேறு வகையில் முன்னேறி உள்ள தமிழ்நாட்டில் கிராமத்தில் வசிக்கும் 50 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்களிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை. இன்னும் பல்வேறு துறைகளில் பின் தங்கி உள்ள வடமாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் இந்த சான்றிதழ்கள் எப்படி இருக்கும்?

* தேர்தல் ஆணையம் இணையதளத்தில் எஸ்.ஐ.ஆர் பணி தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் இணைக்கும் வடமாநிலத்தவர்களை இதற்கு முன் எந்த மாநிலத்தில் வாக்காளர்களாக இருந்தார்கள் என்பதை எவ்வாறு உறுதி செய்வார்கள் என்பது தெளிவாக கூறப்படவில்லை.

இது ஒரு பக்கம் என்றால் தமிழக வாக்காளர்களுக்கு போடப்பட்டுள்ள கண்டிஷன்களால் தற்போதைய வாக்காளர்கள் பலர் ஓட்டுரிமையை இழக்கும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதோ பாருங்க...

* ஆன்லைனில் எஸ்.ஐ.ஆர் படிவத்தை பூர்த்தி செய்யும்போது, ஆதார் கார்டு அல்லது வேறு முகவரி சான்றில் ஒரு புல் ஸ்டாப் அல்லது பெயரில் எழுத்துக்கள் மாறி இருந்தாலும் ஓட்டுரிமை கிடையாது.

* விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது தவறு இருந்தால், புதிய விண்ணப்பம் வழங்கப்படாது. இதனால் ஓட்டுரிமை போய்விடும்.

* வாக்காளர் புகைப்படத்துடன் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அதில், அருகிலேயே தற்போதைய புகைப்படம் ஒட்ட வேண்டுமென தெரிவித்து உள்ளார்கள். ஆனால், தேர்தல் அதிகாரியோ விருப்பம் இருந்தால் ஒட்டலாம் என்று கூறுகிறார்கள். புகைப்படத்தை ஒட்டவில்லை என்றால் ஓட்டுரிமை கிடையாது.

* விண்ணப்ப படிவத்தில் 3 பகுதி உள்ளது. முதல் பகுதியில் வாக்காளர் விவரங்கள், பெற்றோர் அல்லது உறவினர்கள் விவரங்கள் உள்ளது. 2 வது பகுதியில் வாக்காளரின் முந்தைய எஸ்.ஐ.ஆர் பணியில் இடம்பெற்ற விவரங்கள். இந்த விவரங்கள் இல்லாத வாக்காளர்களின் உறவினர்களுக்கு முந்தைய எஸ்.ஐ.ஆர் பணியில் இடம்பெற்ற விவரங்கள். இதை முழுமையாக பூர்த்தி செய்து கொடுத்தால்தான் வாக்குரிமை கிடைக்கும். ஆனால், பிஎல்ஓக்களாக செல்லும் பலர் மேலே உள்ள விவரங்களை மட்டும் பூர்த்தி செய்தால் போதும் என்று கூறுகிறார்கள்.

* படிவத்தை பூர்த்தி செய்ய பிஎல்ஓக்கள் உதவுவதில்லை. பல இடங்களில் இன்னமும் எஸ்.ஐ.ஆர் படிவத்தை வழங்காமல் உள்ளனர். வீடு வீடாக பிஎல்ஓக்கள் செல்வதில்லை. ஒரே இடத்தில் அமர்ந்து வருபவர்களுக்கு மட்டும் படிவத்தை கொடுக்கின்றனர். இதனால் பலருக்கு ஓட்டுரிமை போகும் அபாயம் உள்ளது.

* சில குடும்பங்களில் அனைவரும் பணிக்கு சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்புகின்றனர். இதனால் அவர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவம் வழங்கப்படுவதில்லை. இவர்களுக்கு விடுமுறை நாட்களில் வீடுகளுக்கு சென்று பிஎல்ஓக்கள் படிவத்தை வழங்குவதில்லை. இதனால், அவர்களுக்கு வாக்குரிமை பறிபோகும் நிலை உள்ளது.

* 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி ஒவ்வொரு தேர்தலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் ஆணையம், எஸ்.ஐ.ஆர் பற்றி மக்களுக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்தாமல் அவசர அவசரமாக செய்வது ஏன்? 100% வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் விரும்பவில்லையா? தகுதியான வாக்காளர்கள் வாக்களிப்பதை தேர்தல் ஆணையம் விரும்பவில்லையா?

இவ்வாறு பல்வேறு கேள்விகள் உள்ளது.

எஸ்.ஐ.ஆர் பணியில் வாக்காளர்களின் ஓட்டுரிமை பறிபோகும் அபாயம் உள்ளது என்பதற்கு அதிகமான காரணங்கள் உள்ளன. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது போல், தமிழகத்தில் பூர்வகுடிகளாக உள்ள வாக்காளர்களை தேர்தல் ஆணையம் விதித்து உள்ள சில காரணங்களால் நீக்கப்பட்டு வடமாநிலத்தவர்களை சேர்க்கும் முயற்சியா என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே, தன்னாட்சி அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தலை நியாயமாக நடத்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையையும், நன் மதிப்பையும் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

* ஓட்டு போடணும்னா இதெல்லாம் இருக்கணும்...

* 1.7.1987க்கு முன்பு இந்தியாவில் அவர் பிறந்திருந்தால் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

* 1.7.1987 முதல் 2.12.2004 வரை உள்ள கால பகுதியில் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த தேதி அல்லது பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில் உரிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். தந்தை அல்லது தாயின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

* 2.12.2004க்கு பிறகு இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில் ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். தந்தையின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில் ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். தாயின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்கும் வகையில் ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

* பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியர் அல்லாதவர் என்றால் நீங்கள் பிறந்த நேரத்தில் அப்போதைய அவரது செல்லுபடியாகிய கடவுச்சீட்டு மற்றும் நுழைவிசைவின் (விசா) நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

* இந்தியாவுக்கு வெளியே பிறந்திருந்தால் வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகம் வழங்கிய பிறப்பு பதிவு சான்றை இணைக்க வேண்டும்.

* பதிவு அல்லது இயல்புநிலை வாயிலாக இந்திய குடியுரிமை பெற்றிருந்தால் குடியுரிமை சான்றிதழ் இணைக்க வேண்டும். கணக்கீட்டு படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் குறிப்பான பட்டியல் அவரது தந்தை, தாய்க்கு சமர்ப்பிக்க வேண்டிய தனித்தனி சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

* திருப்பூரில் மட்டும் 1.5 லட்சம் பீகார் தொழிலாளர்கள் மீண்டும் ஓட்டு போட திட்டம்

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்து விட்டு மீண்டும் திருப்பூர் திரும்ப துவங்கி உள்ளனர். இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பீகார் தொழிலாளர்கள் ஓட்டு போட சொந்த ஊருக்கு சென்று தமிழகம் திரும்பி வருகின்றனர்.

இவர்கள் மீண்டும் தமிழகத்தில் அடுத்த 6 மாதத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களில் விண்ணப்பித்து தங்களது புதிய முகவரிகளின் மூலம் தமிழகத்தில் மீண்டும் வாக்குரிமை பெற முடியும் என்ற நிலையும் இருக்கிறது.

* அவகாசம் கொடுக்காதது ஏன்?

ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடக்கும் போது ஓராண்டுக்கு முன்பிருந்தே புதிய வாக்காளர்கள் சேர்த்தல், முகவரி மாற்றம், பிழை திருத்தம் போன்ற பணிகளுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு முகாம்கள் அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். வீடு வீடாக சென்று ஒலி பெருக்கி மூலம் சொல்வார்கள். தேர்தல் நெருங்குவதற்கு முன் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் திருத்தங்களை மேற்கொண்டு புதிய வரைவு பட்டியலை வெளியிடுவார்கள்.

இந்த பணிகளை தேர்தல் ஆணையம்தான் செய்தது. ஆனால், இப்போது போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கவும், இரட்டை வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் இந்த பணியை மேற்கொள்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அப்படியென்றால், இதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் போலி வாக்காளர்கள் ஓட்டு போட்டார்கள் என்பதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்கிறதா?. வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு விழிப்புணர்வு செய்த தேர்தல் ஆணையம், அதே ஆர்வத்தை எஸ்.ஐ.ஆர் பணியில் செய்யவில்லை.

தற்போதுவரை எஸ்.ஐ.ஆர் பணி என்றால் என்ன? எதற்காக செய்கிறார்கள் என்பது கூட சாமான்ய மக்களுக்கு தெரியவில்லை. இதை தெரிய வைக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு இல்லையா? இதற்கு முன் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே தொடங்கிய தேர்தல் ஆணையம், எஸ்.ஐ.ஆர் பணியை மட்டும் அவகாசம் கொடுக்காமல் ஒரே மாதத்தில் முடிப்பது ஏன்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

* பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களை சேர்க்க பாஜ சதி திட்டம்?

பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆர் பணியில் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 65 லட்சம் வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா உட்பட 9 மாவட்டங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடக்கிறது. இந்த மாநிலங்களில் பீகார் மாநில மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இதில் குறிப்பாக, தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பீகார் மக்கள், சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணி முடிந்தவுடன் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, புதிய வாக்காளர்களை சேர்க்க அனுமதி வழங்கப்படும். அப்போது, பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து பாஜ திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Advertisement

Related News