சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்; தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது, தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை ( எஸ்.ஐ.ஆர்) ஒரு வாரத்தில் துவங்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தலித் முஸ்லிம் வாக்காளர்கள் குறிவைத்து நீக்கப்பட்டு இருப்பதாக ஆதாரங்களோடு புகார்கள் கூறப்பட்டுள்ளன.
இவை எதற்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கவில்லை. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது, அவ்வாறு செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, இதை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்குகளில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையிலே பீகாரில் தேர்தல் தேதியைத் தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இது இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கின்ற தேர்தல் நடைமுறைகளைச் சீர்குலைப்பதற்கு தேர்தல் ஆணையமே துணை போகிறது என்பதைத்தான் காட்டுகிறது.
கர்நாடக மாநிலத்தில் ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களுக்குத் தெரியாமலேயே 6000-க்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதை பாஜக வேட்பாளர் திட்டமிட்டே தேர்தல் ஆணையத்தின் உதவியோடு செய்திருக்கிறார் என்பதை கர்நாடக மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு ஆதாரங்களோடு வெளிப்படுத்தி இருக்கிறது. அதற்கும் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்தச் சூழலில் தமிழ்நாட்டிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முறையாக நடக்குமா என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
என்றாலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் பெயர்களை நீக்கவும் சேர்க்கவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். எஸ்.ஐ.ஆர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கு முடியும் வரை தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.