வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் முடிந்த பிறகு பீகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம் தகவல்
பாட்னா: பீகாரில் பேரவை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வௌியிட்டது. அதில், உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் ஓட்டு உள்ளவர்கள் என 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வாக்குகளை திருடும் செயல் என குற்றம்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் செப்டம்பர் 1ம் தேதி வரை(இன்று) விண்ணப்பிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த காலக்கெடுவை வரும் 15ம் தேதி வரை நீட்டிக்க கோரி ஆர்ஜேடி, ஏைஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் முடிவடைந்த பிறகு அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “புதிய வாக்காளர் அடையாள அட்டை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. முன்னதாக வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் தரப்பட்டபோது நிரப்பப்பட்ட ஆவணத்தை அண்மையில் எடுத்த புகைப்படத்துடன் சேர்த்து சமர்ப்பிக்குமாறு வாக்காளர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர்” என்று தெரிவித்தனர். எனவே, புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கவும் புதிய புகைப்படம் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
எஸ்ஐஆர் குறித்த 89 லட்சம் புகார்கள் நிராகரிப்பு
இதனிடையே, சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக காங்கிரஸ் அளித்த 89 லட்சம் புகார்கள் நிராகரிப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முறைகேடுகள் பற்றி எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தும் எந்த புகாரும் வரவில்லை என தேர்தல் ஆணையம் செய்திகளை பரப்பி வருகிறது.
உண்மையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையில் உள்ள முறைகேடுகள் தொடர்பாக 89 லட்சம் புகார்களை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சமர்ப்பித்தது. ஆனால், அந்த புகார்களை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இது தேர்தல் ஆணைய செயல்பாடு மீது சந்தேகத்தை எழுப்புகிறது” என குற்றம்சாட்டி உள்ளார்.